இரட்டைக் குடியுரிமையை மலேசிய சட்டம் அங்கீகரிக்கவில்லை-டத்தோ ஸ்ரீ சைஃபுடின் !
- Muthu Kumar
- 17 Nov, 2024
பாசிர் மாஸ், நவ. 17
இரட்டைக் குடியுரிமையை மலேசிய சட்டம் அங்கீகரிக்கவில்லை என்பதுடன், யாராவது அத்தகைய குடியுரிமையைக் கொண்டிருந்தால் அது ஒரு குற்றமாகும்.இதன் அடிப்படையில், மலேசியா மற்றும் தாய்லாந்து இரட்டைக் குடியுரிமையை கொண்டிருக்கும் தனிநபர்களின் பட்டியல் தொடர்பில் தாய்லாந்து போலீசாரிடமிருக்கும் தகவல்களைப் பெறுவதை தமது தரப்பு வரவேற்பதாக, உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறியுள்ளார்.
"மலேசியாவும் தாய்லாந்தும் நல்ல அரசாங்க உறவுகளைக் கொண்டிருக்கின்றன.ஆதலால், இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் பட்டியலை, இவ்விரு நாடுகளுக்கும் இடையில் ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள கூட்டு செயற்குழு மூலம் அவர்கள் (தாய்லாந்து போலீசார்) வழங்கலாம்.“அப்பட்டியல் கிடைத்தவுடன், தேசிய பதிவகத்துடன் நாங்கள் சரிபார்ப்போம். அதன் பின்னரே அதை எங்களால் உறுதிப்படுத்த முடியும்.
“இரட்டை குடியுரிமையை மலேசிய சட்டம் அங்கீகரித்ததில்லை. ஒருவர் இரண்டு அடையாளக் கார்டுகளைக் கொண்டிருந்தால், அது சட்டப்படி குற்றமாகும்."தாய்லாந்து போலீசார் எத்தகைய குற்றச்சாட்டை தெரிவித்தாலும் அவற்றை நாங்கள் ஓர் அறிக்கையாகவே கருதுவோம். உண்மையாக இருந்தால், அத்தகைய அடையாளக் கார்டுகளை வைத்திருப்போரின் பட்டியலை வழங்குமாறு அவர்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்' என்று சைஃபுடின் தெரிவித்தார்.
கிளந்தான், பாசிர் மாஸில் நேற்று சனிக்கிழமை நடந்த'ஒரு தலைவர், ஒரு கிராமம்' எனும் திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது சைஃபுடின் இதனைத் தெரிவித்தார்.மலேசிய-தாய்லாந்து எல்லைகளில், தீவிரமாகச் செயல்படும் போதைப் பொருள் கடத்தல்காரர்களும் குற்றவாளிகளும் இரட்டை குடியுரிமையைக் கொண்டிருக்கும் சாத்தியத்தை தாய்லாந்து போலீசார் நிராகரிக்கவில்லை என்று. இதற்கு முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தன.
போதைப் பொருள் மற்றும் குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்ட பின்னர் அத்தகைய குற்றவாளிகளில் சிலரை தாய்லாந்து போலீசார் கைது செய்திருப்பதாக, நராதிவாட் மாவட்ட போலீஸ் தலைவர் போலீஸ் கர்னல் பிராத்யா பைத்தே கூறியதாக தெரிவிக்கப்பட்டது.இரட்டை அடையாளக் கார்டுகளைக் கொண்டிருப்பதனால், இரண்டு நாடுகளின் போலீசாரும் தேடும்போது குற்றவாளிகள் மலேசியா அல்லது தாய்லாந்துக்கு தப்பிச் செல்ல சுலபமாக இருக்கிறது என்றும் பிராத்யா கூறியிருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *