பண மோசடி கும்பல் கையாட்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும்-எம்.குலசேகரன்!
- Muthu Kumar
- 19 Nov, 2024
கோலாலம்பூர், நவ. 19-
பணமோசடிக் கும்பல்களின் கையாட்களாகச் செயல்படும் நபர்களின் வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கும் அதில் உள்ள பணத்தைக் கையகப்படுத்துவதற்கும் போலீசாருக்குத் தற்போது அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 30ஆம் தேதி நடப்புக்கு வந்த புதிய சட்டங்கள் இதற்கு அனுமதி அளிக்கின்றன என்று சட்ட மற்றும் துறைசார் சீர்திருத்த துணையமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்தார்.கையாட்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள களவாடப்பட்ட பணத்தை நிதிமோசடியில் ஈடுபடும்நபர்கள் மீட்பதைத் தடுக்கும் நோக்கத்தில் சந்தேகத்திற்குரிய வங்கி கணக்குகளைப் போலீசார் இனிமேல் முடக்க முடியும். இதற்கு வகை செய்யும் புதிய சட்டங்கள் குற்றவியல் சட்டத்தின் 116டி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
குறிப்பிட்ட ஒரு செயல் குற்றம் என்று போலீசாருக்குச் சந்தேகம் எழுமானால், அச்செயலில் ஈடுபட்டவர்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணம் குற்றச் செயல்கள் மூலம் கிடைக்கப்பெற்றது எனும் அனுமானத்திற்கு அவர்கள் வரமுடியும். அதனை நீதிமன்றத்தில் ஒரு சாட்சிப் பொருளாகவும் அவர்கள் பயன்படுத்த முடியும் என்று மக்களவையில் குலசேகரன் குறிப்பிட்டார். குறிப்பிட்ட பணம் குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டது என்பது தெரிய வந்தால், அதனைக் கைப்பற்றுவதற்கோ பரிமாற்றம் செய்வதைத் தடுப்பதற்கோ சார்ஜண்ட் பதவியில் உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு அச்சட்டத்திருத்தங்கள் அனுமதியளிக்கின்றன.
அப்பணத்தை மீட்பதற்குப் போலீஸ்காரர்களுக்கு அவை அனுமதியளிப்பதோடு மட்டுமன்றி பணமோசடிக்காரர்களின் கையாட்களாகச் செயல்படும் நபர்களின் வங்கிக்கு கணக்குகளிலிருந்து அந்நபர்கள் பணத்தை மீட்பதையும் அது தடுக்கும் என்றார் அவர்.அந்த சட்டத்திருத்தங்கள் கடந்த ஜூலை மாதம் மேலவையில் நிறைவேற்றப்பட்டது. செப்டம்பரில் அதற்கு பேரரசர் இசைவு தெரிவித்தார். அது அக்டோபர் 30ஆம் தேதி நடப்புக்கு வந்தது.
இதனிடையே, கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கும் இவ்வாண்டு செப்டம்பர் மாதத்திற்கும் இடையில் மொத்தம் 52,836 மோசடி அழைப்புகள் பெறப்பட்டன. அதன் மூலம் முப்பது கோடியே இருபத்தோரு லட்சம் வெள்ளி இழப்பு ஏற்பட்டது என்று தேசிய மோசடி முறியடிப்பு மையம் தெரிவித்துள்ளது என்றும் குலசேகரன் கூறினார்.பக்காத்தான் ஹராப்பானின் கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங்கின் கேள்விக்கு பதிலளிக்கையில் இந்த விவரங்களை அவர் வெளியிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *