சொஸ்மாவில் கைது செய்யப்பட்ட 32 பேரை விடுதலை செய்க-குடும்பத்தார் கண்ணீர்!
- Muthu Kumar
- 17 Nov, 2024
இரா.கோபி
கோலாலம்பூர், நவ. 17-
கடந்தாண்டு 3.5.2023இல் டி.ஆர்.கும்பலைச் சேர்ந்த 32 பேரை கோலாலம்பூர்- சிலாங்கூர் மாநில போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களுக்காக வாதாட வழக்கறிஞர் ஹர்ப்பால் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று தலைநகர் ஜாலான் ஈப்போவில் உள்ள கேகேபி மண்டபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறுகையில் செக்ஷன் 130/வி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை ஒருபோதும் வழக்கறிஞர்கள் வாதாடி வெளியே கொண்டு வர முடியாது.
காரணம் சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் கிட்டத்தட்ட 4 முதல் 5 ஆண்டுகள் வரை சிறையில் இருப்பதற்கு போலீஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார். 2018ஆம் ஆண்டு '08' குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். அதேசமயம் 2022ஆம் ஆண்டு 20 பேரை ஜே.எஸ்.டி.கும்பல் என்று கூறி கைது செய்தனர். அந்த கும்பலில் உள்ளவர்களும் இந்த 32 பேரில் அடங்குவர். 2023ஆம் ஆண்டு அதே நபர்கள் டி.ஆர். கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸார் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த வகையில் விசாரணை செய்து இந்த 32 பேரையும் போலீஸார் கைது செய்தனர் என்பது தெரியவில்லை. இந்த வழக்கை உயர் நீதிமன்றத்திலிருந்து கூட்டரசு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று விண்ணப்பம் செய்துள்ளேன்.
இந்த வழக்கில் செக்ஷன் 4, செக்ஷன் 16, செக்ஷன் 18 ஏ, செக்ஷன் 20, செக்ஷன் 30 மற்றும் செக்ஷன் 132 பிரிவுகளை முடக்க வேண்டும் என்று அவர் கூறினார். நேற்று நடைபெற்ற சந்திப்புக் கூட்டத்தில் சொஸ்மாவின் கீழ் கைது செய்யப்பட்ட குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தபோது அவர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
கோலசிலாங்கூரைச் சேர்ந்த திருமதி குணசுந்தரி கூறுகையில், தன் கணவர் அமரன் கைது செய்யப்பட்டார். போலீஸார் வீட்டிற்கு வந்து என் கணவரைக் கைது செய்த போது. அவரிடம் வாக்குமூலம் எடுத்துவிட்டு அனுப்பி விடுவோம் என்று கூறினர். ஆனால் 8 மாதங்கள் ஆகியும் என் கணவர் வீடு திரும்பவில்லை. எனக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இவர்களை வளர்ப்பதற்கு பெரும் சிரமமாகவும் துன்பமாகவும் இருக்கிறது. என் கணவர் இருக்கும்போது பாதுகாப்பாகவும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவும் உதவியாக இருந்தது. என் பிள்ளைகள் தந்தையைப் பார்க்காமல் ஏங்கிப் போயுள்ளனர். எந்தத் தவறுமே செய்யாத என் கணவரை கைது செய்ததில் எந்த நியாயமும் இல்லை என்று அவர் கூறினார்.
கோலசிலாங்கூரைச் சேர்ந்த திருமதி சுசிலா கூறுகையில், என் கணவர் அண்ட்ரூ லியூ என் குடும்பத்தை வழிநடத்திக் கொண்டிருந்தார். அவர் வீட்டிலிருக்கும்போது போலீஸாரால் கைது செய்யப்பட்டு 8 மாதங்கள் ஆகிவிட்டன. என் நகைகளை அடைமானம் வைத்து வீட்டு வாடகையை கட்டிக் கொண்டிருக்கின்றேன். அவர் இல்லாமல் எனக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. யாரோ செய்த தவறுக்கு அவரை கைது செய்ததில் எந்த நியாயமும் இல்லை என்றார். 56 வயதான திருமதி கமலக்கன்னி என் மகன் பார்த்திபனை போலீஸார் வீட்டிற்கு வந்து கைது செய்தனர். என்னைப் பார்த்துக் கொள்வது என் மகன்தான். இந்த 8 மாதகாலமும் ஒவ்வொருவரிடம் உதவி கேட்டு என் வாழ்க்கையை நடத்தி வருகின்றேன். நானும் நோய்வாய்ப்பட்டிருக்கின்றேன். உதவிக்கு யாருமே இல்லை. தயவு செய்து போலீஸார் சொன்னதுபோல் என் மகனிடம் வாக்குமூலம் எடுத்துவிட்டு விட்டுவிடுவார்கள் என்று நம்பினேன். ஆனால் போலீஸார் ஏமாற்றித்தான் என் மகனைக் கொண்டு சென்றனர் என்றார்.
காப்பாரைச் சேர்ந்த திருமதி தமிழ்ச்செல்வி கூறுகையில், நான் ஒரு நோயாளி, என் கணவருக்கு ஆஸ்மா உள்ளது. எங்களை என் மகன்தான் கவனித்து வந்தார். அதிகாலையில் வீட்டிற்கு வந்து என் மகனைக் கைது செய்தனர். கைது செய்யும்போது வாக்குமூலம் எடுத்துவிட்டு அனுப்பி விடுவோம் என்று சொல்லிவிட்டு அனுப்பாதது மிகவும் வருத்தமாக உள்ளது என்றார். ஒரு தடவை என் மகனைப் பார்ப்பதற்கு சுங்கைபூலோ செல்வதற்கு 150 வெள்ளி செலவாகிறது. இந்த பணத்தை உறவினரிடம் கடனாகப் பெற்றுள்ளேன் என்றார்.
மின்சாரக் கட்டணத்தைக்கூடக் கட்ட முடியாமல் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் கடன் வாங்கித்தான் செலுத்திக் கொண்டிருக்கிறோம். காவல்துறையினர் தயவு செய்து என் மகனை கூடிய விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *