யூஇசி சான்றிதழ் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்-பாஸ் கட்சிக்கு கோரிக்கை!
- Muthu Kumar
- 18 Nov, 2024
கோலாலம்பூர், நவ. 18-
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் (யூஇசி) பட்டதாரிகளை அங்கீகரிப்பது ஒருமைப்பாட்டுக்கும் தேசிய ஒற்றுமைக்கும் ஒரு தடையாக இருக்கும் எனும் பேராக் பாஸ் தலைவர் ரஸ்மான் ஜக்காரியாவின் வாதத்தை கெராக்கான் நிராகரித்துள்ளது.யூஇசி உட்பட தேசியக் கல்வி சம்பந்தப்பட்ட விவகாரங்களை எவரும் அரசியலாக்கக்கூடாது என்று கெராக்கான் கட்சியின் தலைவர் டோமினிக் லாவ் நேற்று வலியுறுத்தினார்.
நமக்கு வழிகாட்டிக் கட்டமைப்பாக இருக்கக்கூடிய கூட்டரசு அமைப்புச் சட்டத்தை கெராக்கான் பின்பற்றி நடக்கிறது. எங்களைப் பொறுத்தவரையில், ஒருமைப்பாட்டுக்கும் தேசிய ஒற்றுமைக்கும் யூஇசி ஒரு தடையாக இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.யூஇசி சான்றிதழ் வைத்திருக்கும் மாணவர்களும் தாய்மொழிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் மலாய்மொழியில் திறமையற்றவர்களாக உள்ளனர் எனும் கருத்தை ஏற்க முடியாது என்று கோலாலம்பூரில் கெராக்கானின் 52ஆவது தேசியப் பேராளர் மாநாட்டைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் லாவ் கூறினார்.
யூஇசிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டால் தேசிய ஒருமைப்பாட்டை அடைவது மலேசியாவுக்குச் சாத்தியம் இல்லை என்று பேராக் சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான ரஸ்மான் தமது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். யூஇசிக்கு அங்கீகாரம் அளிப்பது மற்றும் “மலேசியா எனது இரண்டாவது வீடு எனும் திட்டம் ஆகியவை குறித்து நேர்காணல் ஒன்றில் ரஸ்மான் தமது கவலையைத் தெரிவித்திருந்தார்.
அவ்விரு திட்டங்களும் மலாய்க்காரர்களின் ஆதிக்கத்திற்கு ஒரு மிரட்டலாக விளங்குகிறது என்பதோடு மலாய் அல்லாத சமூகங்கள் நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கிறது என்று குனோங் செமங்கோல் சட்டமன்ற உறுப்பினருமான ரஸ்மான் கூறியிருந்தார்.யூஇசி அங்கீகார விவகாரத்தை எவரும் அரசியலாக்கக்கூடாது என்று பெர்சத்து தலைவர் அஸ்மின் அலி நேற்றுமுன்தினம் வலியுத்தியிருந்தார்.
சிலாங்கூர் மந்திரி பெசாராக தாம் சேவையாற்றிய நேரத்தில் யூஇசி சான்றிதழை அங்கீரிப்பது ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை என்று உலு கிள்ளான் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்மின் சுட்டிக் காட்டியிருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *