அம்னோ தலைவர் பதவியிலிருந்து இறங்கி விடாதீர்கள் புங் மொக்தார்-ஜாயிட் இப்ராஹிம்!
- Muthu Kumar
- 20 Nov, 2024
கோலாலம்பூர், நவ. 20-
லஞ்ச வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பதன் காரணமாக சபா அம்னோ தலைவர் பதவியைத் துறந்துவிட வேண்டாமென்று கினபாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினர் புங் மொக்தார் ராடினை சட்டத்துறையின் முன்னாள் அமைச்சர் ஜாயிட் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ளார்.அப்பதவியிலிருந்து விலகினாலும்கூட அம்னோவினால் கூடுதல் வாக்குகளைக் கைப்பற்ற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
ஒருவர் மீது சுமத்தப்படும் குற்றங்கள் கடுமையானதாக இருந்தாலும், அது உண்மை என நிரூபிக்கப்படுவதற்கு முன்பு பதவி விலகுவது தற்போதைய அரசியல் களத்தில் வெகுளித்தனமானதும் நடப்புக்கு ஒவ்வாததும் ஆகும். அரசியல் பகைவர்களுக்கு எதிராக சட்டங்கள் தற்போது ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதே இதற்கு காரணமாகும் என்று ஜாயிட் சுட்டிக் காட்டினார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் முதன்முறையாக டொனால்ட் டிரம்ப் போட்டியிட முனைந்தபோது நியூயார்க்கில் அவர் மீது பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டன. அதனையும் மீறி போட்டியிட்டதால் அவர் வெற்றிபெற்றார். அதற்கு முன்பாக,பதவி விலகியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று தமது எக்ஸ் களப் பதிவில் ஜாயிட் வினவினார்.“இன்றைய உலகில் எல்லாமே அதிகாரம்தான். சபாவில் வெற்றியை உறுதிசெய்யுங்கள் புங் அவர்களே.உங்களுக்குத் தேவையானது சில சமரசங்கள் மட்டும்தான் என்றார் ஜாயிட்.
நேர்மையான தலைமைத்துவம் மிக அவசியமான ஒன்றாகும். துரதிர்ஷ்டவசமாக நமது நாட்டில் நேர்மை பற்றி எவரும் அதிகம் கவலைப்படுவதில்லை. ஆகவே, அம்னோ தலைவர் பதவியிலிருந்து இறங்கி விடாதீர்கள் என்று புங் மொக்தாரை வலியுறுத்தினார்.பதினைந்து கோடி வெள்ளி பெல்கிரா முதலீட்டுத் திட்டம் தொடர்பான ஊழல் வழக்கில் தற்காப்புவாதம் புரியும்படி புங் மொக்தாருக்கும் அவரின் மனைவிக்கும் மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்றுமுன்தினம் உத்தரவிட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *