மலேசிய இந்துக்களின் ஆன்மிக வழிபாடுகளை அவமதிக்கும் கருத்துகள்: ஜொகூர் மாநில மஇகா கண்டனம்!

- Muthu Kumar
- 09 Mar, 2025
(கோகி கருணாநிதி)
மாசாய், மார்ச் 9-
ம.இ.கா. ஜொகூர் மாநிலம், சமூக வலைத்தளத்தில் சம்ரி வினோத் என்பவர் வெளியிட்ட மலேசிய இந்துக்களின் ஆன்மிக வழிபாடுகளை அவமதிக்கும் கருத்துகளை கடுமையாக கண்டித்து, நேற்று பண்டார் செரி ஆலாம் மாவட்டக் காவல் தலைமையகத்தில் அதிகாரப்பூர்வ புகார் செய்தனர்.
இந்த புகாரை பதிவு செய்தவர்களில் ஜொகூர் மாநில ம.இ.கா. தொடர்புக்குழுத் தலைவர் கந்தவேல் சாமிவேல், ம.இ.கா. தாமான் கெம்பாஸ் பாரு கிளைத் தலைவர், ம.இ.கா. இளைஞரணியின் சட்டக் குழுத் தலைவர், ம.இ.கா. தாமான் கெம்பாஸ் பாரு கிளை இளைஞரணி தலைவர் நக்கீரன் குமார் கந்தவேல், மற்றும் ம.இ.கா. ஜொகூர் மாநில மதக் குழுத் தலைவர் கே. சேகரன் ஆகியோர் இந்த போலீஸ் புகாரைச் செய்தனர்.
சம்ரி வினோத் வெளியிட்ட கருத்துகள் மலேசிய இந்துக்களின் மத வழிபாடுகளையும் பழக்கவழக்கங்களையும் முற்றிலும் அவமதிக்கும் வகையில் இருந்ததோடு, மத நல்லிணக்கத்தையும் சமூக அமைதியையும் பாதிக்கும் ஆபத்தான போக்காக அமைந்துள்ளது.
ம.இ.கா. தலைவர்கள் இந்த விவகாரத்தில் தீவிர கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் எந்தச் செயலையும் ஏற்க முடியாது என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்."மத நல்லிணக்கத்தைக் குலைக்கும், சமூக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு செயலையும் ம.இ.கா. ஒருபோதும் ஏற்காது. மலேசியா ஒரு பன்முக மத, பண்பாட்டு நாடாக இருப்பதால், மத நல்லிணக்கம் மிக முக்கியமானதாகும்.
எனவே, சம்ரி வினோத்தின் மீது உடனடியாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்", என ம.இ.கா, மாநிலத் தலைவர்கள் வலியுறுத்தினர்.மாநில இளைஞரணி மற்றும் மதக் குழுவினர் இணைந்து, இந்த விவகாரத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறையை வலியுறுத்தி உள்ளனர்.
"மலேசியாவில் அனைத்து மதங்களுக்கும் சமத்துவ உரிமை உள்ளது. எந்த மதத்தையும் அவமதிக்கும் செயல்களை ம.இ.கா. கடுமையாக எதிர்க்கும். இதுபோன்ற தேவையற்ற கருத்துக்களை அனுமதிக்கக் கூடாது. அதற்கு உடனடியாக உரிய விசாரணை நடத்தி, குற்றவாளியை சட்டத்தின் முன் கொண்டு வர வேண்டும்" எனவும் ஜொகூர் ம.இ.கா. வலியுறுத்தியுள்ளது.
MIC Johor membuat laporan polis terhadap Zamri Vinod kerana menghina amalan keagamaan Hindu di media sosial. Mereka menuntut tindakan tegas diambil bagi menjaga keharmonian masyarakat. MIC menegaskan bahawa semua agama perlu dihormati dan sebarang penghinaan tidak boleh diterima.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *