ஏரா எஃப்எம் சர்ச்சையை மறந்து ஒற்றுமைக்காக பாடுபடுங்கள்- அன்வார்!

- Muthu Kumar
- 13 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 13-
ஏரா எஃப்எம் வானொலி நிலையத்தின் மூன்று அறிவிப்பாளர்கள் கொச்சைப்படுத்திய விவகாரத்தை மறந்துவிட்டு ஒற்றுமையின் தூதுவர்களாகச் செயல்படும்படி மலேசியர்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகவியலாளர்களுடன் அண்மையில் நடைபெற்ற நோன்புத்துறப்பு நிகழ்ச்சியில் அம்மூவரையும் சந்தித்தபோது அன்வார் இந்த கோரிக்கையை விடுத்தார் என்று அவரின் மூத்த பத்திரிகைச் செயலாளர் துங்கு நஷ்ருல் அபாய்டா குறிப்பிட்டார்.
தங்களின் அன்றாடப் பணியின்போது ஒற்றுமையின் தூதுவர்களாகச் செயல்படும்படி அந்த மூன்று அறிவிப்பாளர்களுக்கும் அன்வார் அறிவுரை வழங்கினார். அந்த மூவர் மட்டுமல்லாது அனைவரும் அமைதிக்காகப் பாடுபட வேண்டும். பல்வேறு பின்புலங்களையும் இனங்களையும் சமயங்களையும் சமூகங்களையும் கொண்ட மலேசியர்களை ஒற்றுமைப்படுத்தும் மடானி அரசாங்கத்தின் முயற்சிக்கு அனைவரும் கைகொடுக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார் என்று துங்கு நஷ்ருல் கூறினார்.
இந்த விவகாரத்தை மறந்துவிட்டு மலேசியர்கள் அனைவரும் பரஸ்பர மரியாதையுடன் நடந்து வரவேண்டும் என்றும் அன்வார் கேட்டுக் கொண்டுள்ளார் இந்த விவகாரம் தொடர்பான பதற்றநிலையைத் தணிப்பதற்கு உதவிய தரப்பினருக்கு அவர் பாராட்டும் தெரிவித்துள்ளார் என்றார் துங்கு நஷ்ருல்.
காவடி ஆட்டத்தைக் கொச்சைப்படுத்திய ஏராஎஃப்எம் வானொலி நிறுவனத்தின் நடத்துநரான மேஸ்ட்ரோ புரோட்காஸ்ட் நிறுவனத்திற்கு நேற்றுமுன்தினம் இரண்டரை லட்சம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *