பிப்ரவரி 21ம் நாள் உலகத்
தாய்மொழி நாளாகும். இந்நாளை ஐக்கிய நாட்டுச் சபை உலகத் தாய்மொழி நாளாக
அறிவித்துள்ளது.
உலகில் உள்ள அனைவரும் அவரவர் தாய்மொழியை எவ்வாறு
மதிப்பாகவும் மரியாதையாகவும் கொண்டாட முடியுமோ, அவ்வாறே அவர்கள் கொண்டாடி மகிழலாம்.
நாமும் நமது தாய்மொழியை நம் இரு கண்களாக மதித்து, அதைப் போற்றிப் பாதுகாக்கும் உணர்வு நம்மிடையே
நிறைந்திருக்க வேண்டும். இதை யாரும் நமக்கு உணர்த்த வேண்டிய அவசியமில்லை
என்றபோதிலும் மொழிப்பற்றும் இனப்பற்றும் நமது இரத்தத்தோடு கலந்ததாக இருக்க
வேண்டும். இதை உணர்த்துவதற்காகவே தாய்மொழி நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
'தமிழுக்கும் அமுதென்று பேர், அந்த இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்று பாரதிதாசனும், 'தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்' என்று பாரதியாரும் பகன்றுள்ளார்.
தாய்மொழியான தமிழ் இந்திய அரசாங்கத்தால் செம்மொழி
(இருக்கின்ற மொழிகளிலேயே மிகவும் தொன்மையான மொழி தமிழ்) தகுதி வழங்கிச்
சிறப்பித்துள்ள வேளையில், கல்தோன்றி மண்
தோன்றா காலத்தே தோன்றிய மூத்தமொழி என அறிஞர்களால் போற்றப்படுகிறது.
நமது தாய்மொழி தமிழ் என்றாலும் இத்தாய்மொழித் தமிழ் எவ்வாறு
எக்காலத்தில் யாரால் நீரூற்றி உரமிட்டு வளர்க்கப்பட்டது என்றும் அதை இன்றைய
காலம்வரை நீடித்து நிலைத்து உலகெங்கும் பரவியிருக்க யார் யாரெல்லாம்
பாடுபட்டார்கள் என்பதையும் நீங்கள் அறிந்தால் உங்களை வியப்பில் ஆழ்த்தும்.
தாய்மொழித் தமிழ் என்பதானது தானாக எதையும் சாதிக்கவில்லை.
அதைச் சாதிக்க உலகுள்ளவரை அது வாழையடி வாழையாக வளர்ந்து கொண்டிருக்க, பல அறிஞர்களும் கவிஞர்களும் அல்லும் பகலும் பாடுபட்டு ஊன்
உறக்கமின்றி நமது தாய்மொழியான தமிழ் மொழியை நாமதனைவரும் அறிந்து கொள்ள
கடமையாற்றியுள்ளனர்.
தாய்மொழி நாளில் அவர்களிப்பற்றி அறிந்து, தெரிந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையாக இருக்க
வேண்டும். தமிழின் தொன்மையை, இனிமையை
அறிந்து, அனுபவித்து அதை மேலும்
செழிப்புடையதாக்க, கற்றறிந்த
மேதைகளை ஒன்று சேர்த்து, மொழி ஆய்வு
செய்யவும், அரிய இலக்கியங்களை
உருவாக்கவும் பாண்டிய மன்னர்களில் ஒருவரான 'காய்சினவழுதி மதுரையில் முதல் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தார்,
மொழிக்கென உலகில் முதலாவதாகத் தோற்றுவிக்கப்பட்ட சங்கம்
இதுவேயாகும். ஏறத்தாழ 13 ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன் தென் மதுரையில் தோற்றுவிக்கப்பட்ட இச்சங்கத்தில்
நூற்றுக்கணக்கான புலவர்கள் வீற்றிருந்து ஏராளமான, இலக்கண இலக்கிய நூல்களைப் படைத்துள்ளனர். 'கருங்கோன்' என்ற மன்னன் காலத்தில்
பாண்டிய மண்டலத்தில் நேர்ந்த கடற்கோளால் தென் மதுரையும் பிற பகுதிகளும் அழிந்து
போயின. இவற்றோடு முதல் சங்கமும் அழிவுற்றது. இதன்பின் 'வெண்டோர்ச் சழியன்' என்ற பாண்டிய மன்னன் தனது தலைநகரான 'கடாரபுரத்தில்' இரண்டாம்
சங்கத்தைத் தோற்றுவித்தார். மீண்டுமொருமுறை ஏற்பட்ட கடற்கோள் கடாரபுரத்தையும்
அழித்தது.
அதனை அடுத்து 'முடத்திருமாறன்' என்ற பாண்டிய மன்னன் மதுரை கூடல் நகரில் மூன்றாம் தமிழ்ச்
சங்கத்தைத் தோற்றுவித்தார். இதுவே முதல், இடை, கடைத் தமிழ்ச் சங்கங்கள்
என்றழைக்கப்பட்டாலும் இவை தொடர்ச்சியாக இயங்கவில்லை. கடற்கொந்தளிப்பால்
பாதிக்கப்பட்டு, அழிவுற்று மறைந்து மீண்டும்
உருவாக்கம் பெற்று இயங்கி வந்ததால்தான் தமிழ்ச்சங்கம் என ஒரே பெயராக இல்லாது; முதல், இடை, கடைச் சங்கம் என அழைக்கப்பட்டது.
தலைச் சங்க, 'காய்ச்சின
வழுதி' முதல் 'கருங்கோன்' வரை 89 பாண்டிய மன்னர்களின் ஆதரவில் 1780 ஆண்டுகளுக்கு இடைச் சங்கம் வெண்டோர் செழியன் முதல்
முடத்திருமாறன் வரை 59 பாண்டிய
மன்னர்களின் ஆதரவில் 1180 ஆண்டுகளும், கடைச் சங்கம் முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதி வரை 49 பாண்டிய மன்னர்களின் ஆதரவில் 980 ஆண்டுகளும் இயங்கி வந்தன .
இச்சங்கங்களின் முடிவு நெருங்கிவிட்டது எனத் தெரிந்த
ராமசாமி முதலியார் என்பவர் தம் கைக்குக் கிடைத்த காலத்தால் அழியாத தமிழ் மொழி
தொடர்பாகிய அரிய காப்பியங்களை அவரால் முடியாதென்று தெரிந்தும், அதைப் பாதுகாக்கவும் பயனுள்ள வகையில் பயன்படுத்தவும் உதவும்
வகையில் தம்மிடமிருந்தவற்றை உ.வெ.சாமிநாத ஐயரிடம் கொடுத்து, இந்தத் தமிழ்மொழித் தொடர்பான ஆவணங்களை எதிர்வரும்
தலைமுறையினரிடம் சேர்ப்பிக்கும்படிச் சொல்லி ஒப்படைத்தார்.
உ.வெ.சாமிநாத ஐயர் அவர்களே ஓலைச்சுவடியில் இருந்த தமிழ்மொழி
பொக்கிசங்களை எழுத்துருவில் நூலாகப் புதுப்பித்துப் பதிப்பித்து உலகுக்குத் தமிழ்
மொழியின் தொன்மையைப் பற்றிப் பறைசாற்றினார். முதல் சங்கத்தில் அகத்தியரும்
இரண்டாம் சங்கத்தில் தொல்காப்பியரும் மூன்றாம் சங்கத்தில் வள்ளுவரும், ஒளவையாரும் தந்துள்ள மொழிக் களஞ்சியங்கள் நமக்குத் தெரிய
வரும் செய்தியாகும்
அக்காலத்தில் இயற்றப்பட்டதே தற்சமயம் வரை நாம் சொல்லிக்
கேட்டுப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும், மறைக்கவும் மறக்கவும் முடியாத சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி ஆகிய
ஐப்பெரும் காப்பியங்களாகும். இக்காப்பியங்களே நமக்கு அக்காலத்தில் வாழ்ந்து, நமக்கு முன்னோடிகளான தமிழர்களின் பெருமையை நமக்கு
எடுத்துரைக்கின்றன. இதைத் தவிர சூடாமணி, உதயணன் காதை, நீலகேசி, நாககுமார காவியம், யசோதா காவியம் ஆகிய ஐந்தும் சிறு காப்பியங்களாக இயற்றப்பட்டுள்ளன.
அகத்தியர் பன்னிரு காண்டம், போகர் எண்ணாயிரம், கோரக்கர்
மூலிகைப் பலன் ஆயிரம், கொங்கணவர்
மூவாயிரத்து நூறு, கோரக்கர்
வெண்பா ஏழாயிரம், மச்ச முனி ஒரு
காண்டம், சிவ வாக்கியம் ஐந்து
காண்டம், தாசியர் வண்ணம், உரோம வடுகம் இராமதேவர் சந்தப்பா, நந்தீசர் சந்தம், சங்ருமோ முனி கலித்தொகை, தகு மூவர்
மந்திரம் எண்ணாயிரம், பதஞ்சலி ஏழு
கண்டம் எனப் பெயர் குறிப்பிட்டுள்ளா நூல்கள் கடலாலும் கரையானாலும் காணாது போனதாகச்
சரித்திர நூல்கள் தெரிவிக்கின்றன.
இந்நூல்களில் ஐம்பெரும் காப்பியங்கள், தொல்காப்பியம் போன்ற தமிழுக்கும் தமிழருக்கும் தேவையான
உள்ளடக்கம் நமக்குத் தெரியாமலே போய்விட்டது.
உலகின் முதல் மொழி தமிழே என மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் (THE PRIMARY CLASSICAL LANGUAGE OF THE WORLD) என்று
ஆங்கிலத்தில் தெரிவித்துள்ளார். இன்னும் 200 ஆண்டுகளில் அழிந்து ஒழிந்து போகக்கூடிய மொழிகளில் தமிழும் இருக்கலாம் எனப்
பலர் கூறிவரும் வேளையில், நிச்சயம் அது
நடக்காத காரியம் என்பதை நாம் உணர்வுப்பூர்வமாக அறிந்திடப் பல கரணியங்கள் உண்டு.
காலங்கடந்து இன்றளவும் நீடித்து நிற்கும் நமது தாய்மொழியாம்
தமிழை வாழவைப்பது நமது கைகளிலேயே உள்ளது. நமது மலை நாட்டைப் பொருத்தவரை தமிழுக்கென
526 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன.
அவற்றில் 120,000க்கும் அதிகமான மாணவர்கள்
நமது தாய்மொழியாம் தமிழைக் கற்று வரும் வேளையில், 18,000க்கும் அதிகமான ஆசிரியர்கள் தமிழ்மொழியின்பால் அன்பு கொண்டு, பணியாற்றி வருகிறார்கள். இளைய தலைமுறையைச் சேர்ந்த இவர்கள்
தமிழை இன்னும் உயரமான சிகரத்திற்குக் கொண்டு செல்வார்கள் என்பதையும் வருங்காலத்
தலைமுறையினர் தாய் மொழித் தமிழைப் பேச்சாகவும் மூச்சாகவும் உயிராகவும் மதித்து, வளமான மொழியாகப் புவியுள்ளவரை நீண்ட நெடுங்காலம்
நிலைநிறுத்துவர் என்பதில் நாம் நம்பிக்கை கொள்வோம்.
கணினி யுகமான நவீனக் காலத்தில் தாய்மொழித் தமிழ்
கணினியிலும் பரவியிருப்பது தமிழ் மொழிக்கு என்றென்றும் அழிவில்லை என்பதை நாம்
உலகுக்கு உணர்த்தும் நேரமிது! அதை உணர்த்துவோமாக.
சாகும்போது தமிழ்ப் படித்துச் சாக வேண்டும், என் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும் என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளை மனத்தில் நிறுத்தி, நம் தாய்மொழியாம் தமிழோடு உயர்வோம்!

(கட்டுரையாளர் வெ.அர்ச்சுணன்)