டாலருக்கு மாற்றாக தங்க 'ஸ்டேபிள்காயின்'.. BRICS ன் அதிரடி!

top-news
FREE WEBSITE AD

உலக சந்தையில் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு டாலர் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்நிலையில், டாலருக்கு மாற்றாக கோல்டு ஸ்டேபிள்காயின்களை பயன்படுத்த பிரிக்ஸ் நாடுகள் முயன்று வருகின்றன.

இதை பயன்படுத்துவதன் மூலம் பணவீக்கம், பணமதிப்பு நீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று கிரிப்டோ நிபுணரும், எல் சால்வடார் அரசு ஆலோசகருமான மேக்ஸ் கெய்சர் கூறியிருக்கிறார்.

கோல்டு ஸ்டேபிள்காயின் என்பது ஒரு டிஜிட்டல் கரன்சி போன்றது. நீங்கள் எவ்வளவு தங்கத்தை வைத்திருக்கிறீர்களோ, அந்த அளவுக்கான மதிப்பில் பணம் உங்களிடம் இருக்கும். உதாரணமாக உங்களிடம் ஒரு கிராம் தங்கம் இருக்கிறது எனில், உங்களிடம் ஒரு கோல்டு ஸ்டேபிள்காயின் இருக்கிறது என்று அர்த்தம். இதனை வைத்து வர்த்தகத்தை மேற்கொள்ளலாம். நீங்கள் உண்மையான தங்கத்தை கொடுத்து வியாபாரம் செய்யப்போவது கிடையாது. ஆனால், தங்கத்திற்கு இணையான மதிப்பு கொண்ட டிஜிட்டல் கரன்சி உங்களிடம் இருக்கும்.

இதனை Crypto Wallet அல்லது Blockchain வழியாக பரிமாற்றம் செய்யலாம். ஆன்லைன் பரிமாற்றமும் எளிதாக இருக்கும். பிரிக்ஸ் நாடுகளுக்கு நடுவில் கோல்டு ஸ்டேபிள்காயின் வெற்றிகரமாக இருக்கும்.



இந்த மாற்றத்திற்கு காரணம் டாலர்தான். உலகமே டாலரில்தான் இயங்கிக்கொண்டு இருக்கிறது. உதாரணத்திற்கு சவுதி பெட்ரோலை விற்கிறது. அந்த நாட்டின் கரன்சியான சவுதி ரியாலில்தானே இதை விற்க வேண்டும்? ஆனால் அவர்கள் அமெரிக்க டாலரில் விற்கிறார்கள். எனவே நாம் முதலில் டாலரை வாங்கி, அதை வைத்து பெட்ரோலை வாங்க வேண்டும். ஆஸ்திரேலியா நமக்கு கனிம வளங்களை தருகிறது என்றால் அதுவும் டாலரில்தான் விற்பனை செய்கிறது. இப்படி எங்கு பார்த்தாலும் டாலர் மயம்தான்.

ஆக இதற்கு மாற்றாக மற்றொரு கரன்சியை உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு நாடுகள் பேசி வருகின்றன. இதற்கான முன்முயற்சியை பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு தற்போது முன்னெடுத்திருக்கிறது.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா மட்டும் இருந்த பிரிக்ஸ் கூட்டமைப்பு தற்போது 11 உறுப்பு நாடுகள் 6 பார்வையாளர் நாடுகள் என விரிவடைந்திருக்கிறது. இந்த நாடுகள் டாலரை தவிர்த்து வருகின்றன. ரஷ்யா இந்தியாவுக்கு பெட்ரோலை விற்கிறது. ஆனால், நாம் டாலர் கொடுத்து வாங்குவதில்லை. இந்திய ரூபாயை கொடுத்துதான் வாங்குகிறோம். சீனாவும் இப்படித்தான் வாங்குகிறது. எனவே, சொந்த நாட்டு கரன்சியை பயன்படுத்துவது என்கிற முடிவுக்குள் பிரிக்ஸ் தீவிரமாக இருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக பிரிக்ஸ் நாடுகளுக்கு என ஒரு பொதுவான கரன்சியை உருவாக்கவும் முயன்றது. ஆனால், அப்படி ஏதாவது உருவானால் பிரிக்ஸ் நாடுகள் மீது கூடுதல் வரியை போடுவோம் என அமெரிக்கா அச்சுறுத்தியது. இந்த அச்சுறுத்தல் காரணமாக பிரிக்ஸ் நாடுகளுக்கு என தனி கரன்சி திட்டம் தள்ளி போடப்பட்டு வருகிறது. ஆக பிரிக்ஸ் கரன்சி மற்றும் டாலர் என இரண்டுக்கும் மாற்றாகத்தான் கோல்டு ஸ்டேபிள்காயினை உருவாக்க பிரிக்ஸ் திட்டமிட்டு வருகிறது. இதில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் என மேக்ஸ் கெய்சர் கூறியிருக்கிறார்.

உலகில் தங்கம் அதிகம் புழங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் தங்கம் என்பது ஒரு மரியாதை நிமித்தமான பொருள். விழா நாட்களிலும், திருமணம் உள்ளிட்ட கொண்டாட்டங்களின்போதும் தங்கம் வாங்குவது ஒரு நடைமுறையாக இந்தியாவில் இருக்கிறது. எனவே, கோல்டு ஸ்டேபிள்காயின் இந்தியாவில் சிறப்பாக இயங்கும்.

அதுமட்டும் இல்லாமல் இஸ்லாமிய நாடுகளிலும் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருக்கிறது. எனவே நிச்சயம் கோல்டு ஸ்டேபிள்காயின் திட்டம் வெற்றிகரமானதாக இருக்கும் என சொல்லப்படுகிறது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *