சீன டிராகனும் இந்திய புலியும் ஒன்னு சேர்ந்தா?

top-news
FREE WEBSITE AD

சீனாவில் சுமார் 1000 டன் தங்கம் இரண்டு தங்கச் சுரங்கங்களில் புதைந்துள்ளதை அந்நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளது உலக அளவில் மிகப் பெரிய செய்தியாக மாறி இருக்கிறது.

இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலும் அதிகம் தங்கம் இருப்பதாக வெளிவந்துள்ள தகவல் இந்தியர்களையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. இரு நாடுகளில் இருக்கும் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டால் உலக அளவில் பொருளாதாரத்தில் முக்கிய புள்ளிகளாக இரு நாடுகளும் மாறும். இதனால் தெற்கு ஆசிய பிராந்தியத்தில் வலுவான பொருளாதார சக்திகளாக இரு நாடுகளும் மாற வாய்ப்புள்ளதாக கணித்துள்ளனர் உலகளாவிய பொருளாதார நிபுணர்கள்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்ற நிலையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து இருக்கிறது. பதிலுக்கு பதில் வரி விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து இருக்கிறது. பாதுகாப்பாக முதலீடு செய்ய ஏற்றதாக தங்கம் இருப்பதால் பெரிய தொழில் அதிபர்கள் கூட தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.

இந்தியா போன்ற நாடுகளில் தங்கத்தின் மீதான மோகம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் மகிழ்ச்சி தரும் செய்தி சில தினங்களாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் சீனா நீண்ட காலமாக தங்க சுரங்கங்களை கண்டறிய ஆய்வு நடத்தி வந்த நிலையில் ஹூணான் மாகாணத்தில் ஆயிரம் டன் அளவுக்கு தங்கம் இருப்பதாக கடந்த நவம்பரில் அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் லியோன் மாகாணத்தில் மற்றொரு பகுதியில் 1000 டன் தங்கம் இருப்பதாக வெளியான செய்தி உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. 3டி ஜியோலாஜிக்கல் மானிட்டரிங் தொழில்நுட்பத்தின் மூலம் இந்த தங்க புதையலை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். தற்போது ஹூனான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க சுரங்கத்தில் இருக்கும் தங்கத்தின் மதிப்பு மட்டுமே 83 பில்லியன், அதாவது இந்திய மதிப்பில் 7 லட்சம் கோடிக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை சீனாவில் தங்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டு வெட்டி எடுக்கப்பட்டால் தென்னாப்பிரிக்காவின் சவுத் டீப் கோல்டன் சுரங்கத்தை விட பெரிய சுரங்கமாக திகழும். தற்போதைய சூழலில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷ்யா ஆகிய நாடுகள் தங்க உற்பத்தியில் முன்னிலை வகிக்கின்றன. தற்போது சீனாவில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அது வெட்டி எடுக்கப்பட்டால் அந்த நாடுகளை பின்னுக்குத் தள்ளி சீனா முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் வர்த்தகப் போர் பொருளாதார பிரச்சனைகள் ஆகியவை காரணமாக பெரிய அளவில் பொருளாதார சரிவு ஏற்பட்டிருக்கும் நிலையில் சீனாவுக்கு அடித்துள்ள இந்த ஜாக்பாட் அந்நாட்டை சக்தி வாய்ந்த பொருளாதார நாடாக மாற்றும் என்கின்றனர். இந்த நிலையில் இந்தியாவிலும் தங்கம் கண்டறியப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒடிசா மாநிலத்தில் சுந்தர்கர், நபரங்பூர், அங்குள், கொராபுட் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமான தங்க படிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஒடிசா மாநில சுரங்கத்துறை அமைச்சரான பிபூதி பூஷன் ஜனா கடந்த மார்ச் 23ஆம் தேதி அறிவித்தார். முதல் கட்ட ஆய்வில் மேற்கண்ட மாவட்டங்கள் மட்டுமல்லாது மால்கன்கிரி, சம்பல்பூர், போத் போட்ட ஆகிய மாவட்டங்களிலும் தங்க படிமங்கள் இருப்பது முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்திருப்பதாகவும், கியோன்ஞ்சர், மயூர் பஞ்ச் போன்ற மாவட்டங்களில் தங்கம் இருக்கிறதா என்பதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

தற்போது வெளியாகி உள்ள தகவல் படி முதன் முறையாக தங்கம் வெட்டி எடுப்பதற்கான ஏலம் தியோகர் பகுதியில் விடப்பட உள்ளது. அதுமட்டுமில்லாமல் ஜெசிப்பூர், சரியக்குடா, ருவான்சி, ஐடெல் குச்சா, மருதி, சுளிபட், பதம்பகத் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இங்கெல்லாம் தங்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் தங்கச்சுரங்கத்தில் மையமாக ஒடிசா மாறும். அதுமட்டுமல்லாமல் தாமிரம், மேக்னசைட் உள்ளிட்ட பல்வேறு தனிமங்களும் அங்கு இருப்பது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கும் ஒடிசாவில் தங்கம் இருப்பதும் ஆச்சரியம் இல்லை. அதே நேரத்தில் ஒடிசாவில் இருக்கும் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டால் இந்திய பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் என்கின்றனர். உலக அளவில் ஜவுளி, பட்டாசு, மின் உதிரி பாகங்கள் ஆகியவற்றின் தயாரிப்பில் சீனாவும் இந்தியாவும் போட்டியாளர்களாக இருக்கின்றன. தற்போது தங்க உற்பத்தியிலும் இரு நாடுகளும் நேருக்கு நேர் மோதும் சூழல் உருவாகி இருக்கிறது.

எது எப்படியோ இரு நாடுகளிலும் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டால் தெற்காசிய அளவில் இரு நாடுகளும் மிகப்பெரிய பொருளாதார சக்திகளாக உருவாகும். மேலும் இரு நாடுகளும் ஒன்று சேர்ந்து கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளும் போது அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை பின்னுக்கு தள்ளும் வாய்ப்பு இருக்கிறது என கணித்துள்ளனர் பொருளாதார நிபுணர்கள்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *