ஆசிரியருக்கும் பெற்றோருக்குமான உறவுப்பாலம் நன்றாக இருக்க வேண்டும்! - ஓம்ஸ் பா.தியாகராஜன்

- Shan Siva
- 09 Feb, 2025
கிள்ளான், பிப் 9: கிள்ளான், சிம்பாங் லீமா தேசிய வகை தமிழ்ப்பள்ளியின் 2025-ஆம் ஆண்டுக்கான
ஆண்டு 1 மற்றும் பாலர் பள்ளி மாணவர் அறிமுக விழா இன்று பள்ளியில் நடைபெற்றது. பள்ளி மாணவர் நலப்பிரிவு ஏற்பாட்டில், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஆதரவில் நடைபெற்ற இந்நிகழ்வில்
பாலர் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆண்டு 1 மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும்
கலந்துகொண்டனர்.
பல்நோக்கு மண்டபத்தில்
வேத மந்திரங்கள் ஓத சிறப்புப் பூஜையோடு இந்நிகழ்வு தொடங்கியது.
புதிதாய் பள்ளிக்கு
வந்த குழந்தைகளை உற்சாகப் படுத்தும் வண்ணம் மேஜிக் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததில், குழந்தைகள் மகிழ்ச்சியாய் கைத்தட்டி ஆரவாரம் செய்தது கண்கொள்ளாக்
காட்சியாய் அமைந்தது.
பிஞ்சுக் கரங்களின் கைப்பிடித்து நெல்லில் ‘அ’ எனும் உயிரெழுத்தை ஆசிரியர்கள் அன்பொழுக எழுத வைத்ததில் பெற்றோர்கள் நெகிழ்ந்தனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு
பேசிய பள்ளியின் வாரியத் தலைவரும், ஓம்ஸ் அறவாரியத்
தலைவருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் ‘தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு’ எனும் கொள்கையோடு, தமிழ்ப்பள்ளியில் தங்கள் பிள்ளைகளை அறிமுகப்படுத்தியுள்ள பெற்றோர்களுக்கு
நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்தார். ஒரு குழந்தை சிறந்த குழந்தையாக வளர்வதற்கு
பெற்றோர்கள் எவ்வளவு முக்கியத்துவம் காட்டுகிறார்களோ, அதேபோல
ஆசிரியர்களும் சிறந்த பங்களிப்பை வழங்குகிறார்கள். அன்றைய காலக் கட்டத்தில் ஆசிரியருக்கும்
பெற்றோருக்குமான உறவுப் பாலம் நன்றாக இருந்தது. மாணவனை ஆசிரியர் கண்டித்தால் அதை தன்
பெற்றோர்களிடம் சொல்ல அன்றைய மாணவர்கள் அஞ்சுவார்கள். ஏனென்றால் சொன்னால் பெற்றோரும்
சேர்ந்து அம்மாணவனைக் கண்டிப்பார்கள். அதனால், மாணவர்களும் கட்டொழுங்கோடு
படித்தார்கள். அதனால் அன்றைய காலக் கட்டங்களில் சிறைச்சாலைகளில் நம்மவர்களின் எண்ணிக்கை
பூஜ்யமாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் மாதா பிதா குரு தெய்வம் என தெய்வத்துக்கு
நிகராக ஆசிரியர்களை வைத்துப் போற்றினார்கள். ஆனால் இன்று ஆசிரியர்கள் மாணவர்களைக் கண்டித்தால்
பெற்றோர்கள் ஆசிரியரைக் கண்டிக்க வருகிறார்கள். பத்திரிகைகளில் தெரிவிக்கிறார்கள்.
போலீஸ் புகார்கள் கொடுக்கிறார்கள். இதனால் ஆசிரியர்களும் தவறு செய்த மாணவர்களைக் கண்டிப்பதைத்
தவிர்க்கிறார்கள். அதன் விளைவுதான் இன்று சிறைச்சாலைகளில் நம்மினம் நம்பர் ஒன்றாக இருக்கிறது.
எனவே பெற்றோர்கள் ஆசிரியருக்கு மதிப்பளித்து நடந்துகொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
ஆசிரியருக்கும் பெற்றோருக்கும் இடையேயான உறவுப்பாலம் நன்றாக இருந்தால்தான், பிள்ளைகளுக்கும் ஆசிரியருக்குமான உறவும் நன்றாக இருக்கும். அதன் மூலமாகத்தான் தரமான மாணவர்கள் உருவாக முடியும் என்பதைப் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என ஓம்ஸ் பா.தியாகராஜன் கருத்துரைத்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *