பினாங்கில் ஸ்நூக்கர் விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை!

- Muthu Kumar
- 27 Nov, 2024
ஆர்.ரமணி
பினாங்கு, நவ.27-
பினாங்கு மாநிலத்தில் ஸ்நூக்கர் விளையாட்டை ஊக்குவிக்கும் உன்னத முயற்சியில் அதற்கான ஒரு பிரத்தியேக அரங்கம் இங்குள்ள பாயான் பாரு பகுதியில், சுமார் 18 லட்சம் ரிங்கிட் செலவில் புதுப் பொலிவுடன் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் நிலையில், இவ்விளையாட்டில் மாநில ரீதியாக அதிக அளவில் இளைய சமூகத்தினரை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் மாநில அரசுடன் இணைந்து, பினாங்கு ஸ்நூக்கர் சங்கமும் தீவிரம் காட்டியிருக்கிறது.
ஸ்நூக்கர் விளையாட்டு, மேலை நாடுகளில் பிரசித்தி பெற்று விளங்கியிருக்கும் பட்சத்தில், இதன் மீதான ஈடுபாடு மலேசிய நாட்டவர்கள் மத்தியில், தொய்வு கண்டிருந்தாலும் குறிப்பிட்ட சிலரது ஈடுபாடு, இவ்விளையாட்டை தென்கிழக்காசியப் போட்டியிலும், இதர உலகளாவிய நிலையிலான போட்டிகளிலும் உட்படுத்தியிருப்பது ஆறுதலளிக்கும் வகையில் உள்ளதாக, மாநில இளைஞர் விளையாட்டு மற்றும் சுகாதாரத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டேனியல் கூய் மனநிறைவு தெரிவித்தார்.
இங்கிருக்கும் சம்பந்தப்பட்ட விளையாட்டு அரங்கத்திற்கு வருகையளித்து, தற்போது இங்கு நடைபெற்று வரும், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுக்கான பொது ஸ்நூக்கர் விளையாட்டுப் போட்டிகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களுடனான சந்திப்பு கூட்டத்தில் மேற்கண்டவாறு கருத்துரைத்த டேனியல், தென்கிழக்காசியப் போட்டிகளில் ஸ்நூக்கர் விளையாட்டில் மலேசியர்களும் தங்களது திறமையை சிறப்புடன் வெளிக்காட்டியிருந்ததையும் நினைவு கூர்ந்தார்.
மாநிலத்தில் புதிதாக எழுப்பப்பட்டிருக்கும் இந்த விளையாட்டு அரங்கத்தின் தொடக்க நிலையிலான பொதுப் பிரிவில் மொத்தம் 128 பேர் களம் கண்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும்,இந்த எண்ணிக்கை எதிர்வரும் காலங்களில் மேன்மேலும் அதிகரிக்குமென்று கூறிய அவர், தற்போது நடைபெறும் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் வாகை சூடுபவர்களுக்கு பற்பல கவர்ச்சிகரமான பரிசுகள் மட்டுமின்றி வெற்றிக் கோப்பைகளும் காத்திருப்பதாக குறிப்பிட்டார்.
இப்போட்டியின் வெற்றியாளருக்கு 4 ஆயிரம் ரிங்கிட் ரொக்கப் பரிசுடன் வெற்றிக்கோப்பையும், இரண்டாம் நிலை வீரருக்கு, 2 ஆயிரம் ரிங்கிட் வெகுமதியும், மூன்றாம் நிலை ஆட்டக்காரருக்கு ஓராயிரம் ரிங்கிட்டும் வெல்வதற்கு வாய்ப்புள்ளதாகக் கூறிய அவர், ஸ்நூக்கர் விளையாட்டு மதிநுட்பம் வாய்ந்த சிறப்புமிக்கதென்றும், விவேகத்திறனான உத்திகளுடன் புத்திசாலித்தனமாக செயல்படும் ஆற்றலைப் பெற்றிருந்தால் இவ்விளையாட்டில் வாகை சூடுவது சாத்தியமென்றும் டேனியல் எடுத்துரைத்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *