JAKEL நிறுவனத்தின் பணம் நமக்குத் தேவையா? அரசாங்கமே கொடுக்கலாமே! ஓம்ஸ் பா.தியாகராஜன் வலியுறுத்து!

- Shan Siva
- 27 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 27: தலைநகர், ஜலான் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் வீற்றிருக்கும் அருள் மிகு தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயப் பிரச்னை ஒரு முடிவுக்கு வந்திருப்பது திருப்தியளிப்பதாக மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநரும், ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் தெரிவித்தார்.
மிகவும் உணர்வுப்பூர்வமான இவ்விவகாரத்தை இருதரப்பும் பேசி ஒரு முடிவுக்கு
வந்திருப்பது வரவேற்கத் தக்கது என்பதோடு, அரசு தரப்பில் அதற்கான அதிகாரப்பூர்வ
கடிதம் வழங்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது என்று ஓம்ஸ் பா.தியாகராஜன்
கூறினார்.
இவ்வாலய விவகாரத்தை சர்ச்சையாக்கி தங்களின் சுய அரசியலுக்காக சிலர் குளிர்காய
நினைத்தார்கள். அத்தகையவர்களுக்கு இந்த சுமுகமான தீர்வு மூலம் முடிவு
கட்டப்பட்டுவிட்டதாக அவர் தெரிவித்தார்.
4 ஆயிரம் சதுர அடியில் புதிய இடம் முறையாகக் கிடைத்திருப்பதோடு, ஏற்கெனவே இருந்த இடத்திலிருந்து
50 மீட்டர் தூரத்தில் அந்த இடம் அமைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று
தெரிவித்த அவர், அதோடு அந்த இடம் வசதியான இடம் என்றும், பொதுமக்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக இருக்கும் என்று ஆலயத் தலைவர்
தம்மிடம் கூறியதாக அவர் தெரிவித்தார்.
இனிமேலாவது இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு உண்மையான
நிலவரத்தை உணர்ந்து சர்ச்சைகள் பரவாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அவர்
கேட்டுக்கொண்டார்.
இரு தரப்பினருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் சுமுகமாக இந்தப்
பிரச்னைக்குத் தீர்வு கண்டிருக்கும் அரசுக்கும், நமது பிரதமர் அன்வாருக்கும்
இவ்வேளையில் தாம் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும்,
அதேவேளை இதற்காகப் பாடுபட்ட அனைத்து உள்ளங்களுக்கும் பாராட்டுகளையும்
வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வதாகவும் ஓம்ஸ் பா.தியாகராஜன் கூறினார்.
மேலும், 1 எம்.டி.பி பணத்தில்தான் மசூதி கட்டுவதற்கான நிலத்தை
ஜேக்கெல் நிறுவன வாங்கியிருப்பதாகப் பேசப்படுகிறது. அதற்கான பட்டியலும் வெளியாகி
சர்ச்சையானது. இந்நிலையில் அது உண்மையாக இருக்கும் பட்சத்தில். அத்தகைய தரப்பினர்
கொடுப்பதாகச் சொல்லும் 10 லட்சம் வெள்ளி நமக்குத் தேவையா?
அவர்கள் கொடுக்க முன்வந்ததற்கு நன்றி சொல்கிறோம். ஆனால் அதற்காக நம் பாரம்பரியக்
கோயிலுக்கு ஊழலில் விளைந்த அந்தப் பணம் தேவையில்லை. அந்தப் பத்து லட்சம் வெள்ளி
பணத்தை நம்மால் திரட்ட இயலாதா? என ஓம்ஸ் பா.தியாகராஜன்
கேள்வி எழுப்பினர்.
இந்த விவகாரத்திற்கு அரசாங்கம்தான் முழு பொறுப்பு. எனவே ஆலய நிர்மாணிப்பிற்கான
செலவை அரசாங்கமே கொடுப்பதுதான் நியாயமாக இருக்கும். இதனை அரசு பரிசீலிக்கன்
வேண்டும். அன்வார் கூட நேற்று பேசிய தனது உரையில், ஏன் ஜேக்கெல் நிறுவனம் பணம்
கொடுக்க வேண்டும் என்பதுபோல் பேசியிருந்தார்.
நாங்களும் அதைத்தான் சொல்கிறோம். ஜேக்கல் பணம்
தேவையில்லை. எங்களுக்கு அரசாங்கம்தான் ஆதரவு. அவர்கள் இந்த ஆலய விவகாரத்தைத்
தீர்த்து வைத்ததுபோல், முழுமையாகப் புதிய இடத்தில் ஆலயம்
மீண்டும் உருவாக அரசாங்கமே முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஓம்ஸ்
பா.தியாகராஜன் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
இந்த ஆலய விவகாரம் சுமுகமாக்கப்பட்டுவிட்டது. இந்த விஷயத்தில் நம் ஆலயத்
தரப்பிலும் சில அலட்சியப் போக்குகள் இருந்தாலும், அரசாங்கம் சீர்தூக்கிப்
பார்த்து ஒரு முடிவு எட்டப்பட்டுள்ளது.
உணர்வுப்பூர்வமான இந்தப் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. இதற்காக
அரசியல் தலைவர்கள், சமூகத் தலைவர்கள், பொதுமக்கள் என எல்லாத் தரப்பினரும் ஒற்றுமையாய் குரல் கொடுத்திருக்கிறார்கள்.
நம் இனம் மட்டும் அல்லாது மலாய்க்காரத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களில் சிலரும்
குரல் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் நன்றிகளைக் கூற நாம்
கடமைப்பட்டுள்ளோம் என ஓம்ஸ் பா.தியாகராஜன் தெரிவித்தார்.
நம் நாட்டில் இன்னும் எத்தனையோ ஆலயங்கள் முறையாகப் பதிவு பெறாமல், அல்லது அந்த விபரம் தெரியாமல் வழிபாட்டுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
இனியாவது சம்பந்தப்பட்ட ஆலயத்தரப்பினர் கொஞ்சம் விழித்தெழுந்து கோயிலைக்
காப்பாற்ற முறையான நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள். நம் தரப்பில் எந்தத் தவறும்
இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என ஓம்ஸ் பா.தியாகராஜன் கேட்டுக்கொண்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *