17 ஆவது அனைத்துலக சிலம்ப போர்க்கலை போட்டி-மலேசிய அணி வாகை சூடியது!

top-news
FREE WEBSITE AD

(நாகேந்திரன் வேலாயுதம்)

நீலாய், நவ.19-

17 ஆவது அனைத்துலக சிலம்ப போர்க்கலை கலாச்சாரப் போட்டி 2024 கிண்ணத்தை மலேசிய சிலம்ப போர்க்கலை அணி வாகை சூடியது. இங்கு நீலாய் மேகா மால் பேரங்காடி வளாகத்தில் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்ற இப்போட்டியில் இரண்டாவது, மூன்றாவது இடங்களை இந்தியா மற்றும் இந்தோனேசிய நாட்டு அணிகள் வென்றன.

இப்போட்டியை அதிகாரப்பூர்வமாக நேற்று நிறைவு செய்துவைத்து பேசிய மலேசிய சிலம்ப போர்க்கலை பேரவைத் தலைவர் ஆதி மகா ருத்ர வீரன் முரளிதரன், இப்போட்டி கடந்த ஆறு ஆண்டுகளாக மலேசிய சிலம்ப போர்க்கலை மன்ற ஏற்பாட்டில் நடைபெற்று வரும் வேளையில், 7 ஆவது ஆண்டாக இப்போட்டி அனைத்துலக சிலம்ப போர்க்கலை சம்மேளன இணை ஏற்பாட்டில் நடைபெறுவதாக அவர் குறிப்பிட்டார். இந்த சம்மேளனம் இவ்வாண்டு தொடக்கத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவுபெற்று, அதன் முதல் விளையாட்டாக இப்போட்டி விளங்குகிறது.




சிலம்ப போட்டி இரு வகையாக நடத்தப்படுவதாக குறிப்பிட்ட முரளிதரன், முதலாவது தொடும் முறை போட்டி, அடுத்து  நடைபெற்றது சிலம்ப பாரம்பரிய கலாச்சாரத்தை மையமாக கொண்ட போட்டி ஆகும்.இதன்வழி நமது பாரம்பரிய உடை, மரியாதை, அதற்கான நடை முறை ஆகியவற்றை உள்ளடக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.இதன் மூலமாக இளைய தலைமுறையினர் மத்தியில் நலிந்து வரும் நமது பாரம்பரிய பண்பாட்டு கலாச்சாரங்களை அவர்களிடையே கொண்டு சேர்ப்பதும், அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஆகும் என கூறினார்.

அனைத்துலக ரீதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்போட்டி அனைத்துலக பாரத் சிலம்ப கவுன்சில், பாரத் சிலம்ப இயக்கம், தமிழ்நாடு சிலம்ப பேரவை, இந்தோனேசிய பாலி ஆனந்த ஆசிரமம் போன்ற சிலம்ப அமைப்புகளின் ஆதரவோடு நடைபெறுவதாக மகாகுரு முரளிதரன் கூறினார்.

இதனிடையே இதன் ஏற்பாடுகள் குறித்து பேசிய இப்போட்டி ஏற்பாட்டுக்குழு தலைவர் இந்திரஜித், இப்போட்டி வயது அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக நடைபெற்றது.இப்போட்டியில் பங்கெடுத்த சிலம்ப வீரர்கள் அனைவரும், சிலம்ப சாகசங்களை சிறப்பான முறையில் வெளிப்படுத்தி பார்வையாளர்களை அசரவைத்தனர் என கூறினார்.

இப்போட்டியில் இறுதி வரையில் கலந்துகொண்ட மலேசிய சிலம்ப போர்க்கலை மன்ற தேசியத் துணைத் தலைவர் சிலம்ப பிரதான குரு சுரேஸ் பாலகிருஷ்ணன், அனைத்துலக பாரத சிலம்ப கவுன்சில் தலைவர் சிலம்பச் செம்மல் கலை முதுமணி ஆர்.முருக கனி ஆசான், தமிழ்நாடு சிலம்ப பேரவைத் தலைவர் ஈசன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *