மழையால் சொதப்பிய பாரீஸ் ஒலிம்பிக் தொடக்க விழா!ரசிகர்கள் தவிப்பு?
- Muthu Kumar
- 27 Jul, 2024
2024 ஒலிம்பிக் தொடரை நடத்தும் உரிமையை ஃபிரான்ஸ் பெற்றது. அதன் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் தொடரை நடத்த முடிவு செய்தது ஃபிரான்ஸ். பாரிஸ் உலகின் கலை தலைநகரமாக பெருமை பெற்று இருக்கும் நிலையில், மொத்த பாரிஸின் அழகை, பாரிஸ் வாழ்வியலை முன்னிறுத்தும் வகையில் ஒலிம்பிக் தொடக்க விழாவை நடத்தப் போகிறோம் என அறிவித்தது ஃபிரான்ஸ்.
இதுவரை நடந்த ஒலிம்பிக் தொடக்க விழாக்கள் பெரிய மைதானங்களில் நடந்தன. ஆனால், தாங்கள் பாரிஸின் செய்ன் ஆற்றில் சுமார் 6 கிலோமீட்டர் தூரத்துக்கு தொடக்க விழாவை நடத்தப் போகிறோம் என ஃபிரான்ஸ் கூறிய போது பலரும் குழம்பிப் போனார்கள். இது சாத்தியமா? என எண்ணிய நிலையில், ஃபிரான்ஸ் அதற்காக பெரும் பணத்தை செலவு செய்ய முன் வந்ததால் பெரிதாக ஏதோ நடக்கப் போகிறது என அனைவரும் நம்பினர்.
ஆனால், பாரிஸ் செய்ன் ஆற்றில் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க இருக்கும் நாடுகளின் படகு அணிவகுப்பு தொடங்கிய சில நிமிடங்களில் மழை கொட்டத் தொடங்கியது. பல படகுகளில் இருந்தவர்களுக்கு "ரெயின் கோட்டும்" வழங்கப்படவில்லை. அனைவரும் நனைந்தபடி சென்றனர்.
மறுபுறம் ஃபிரான்ஸின் அழகை காட்டுகிறோம் என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகளுக்கு நடுவே ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்த காட்சிகளை ஒளிபரப்பினார்கள். அவை "அவார்டு படம்" பார்ப்பது போலவே இருந்தன. பெரும்பாலான காட்சிகள் எதற்காக காட்டப்படுகிறது? என புரிந்து கொள்ள முடியாமல் உலக அளவில் ரசிகர்கள் குழம்பினர்.
இதன் இடையே பாரிஸின் முக்கிய நகரங்களை காட்டுவதற்காக முகமூடி அணிந்த ஒரு நபர் கட்டிடங்களின் மேல் ஓடுவதாக காட்டப்பட்டது. முதலில் அவர் யார்? என்ற சுவாரசியம் இருந்தது. ஆனால், அவர் தொடர்ந்து ஒவ்வொரு கட்டிடமாக செல்வதும், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட காட்சிகள் காட்டப்பட்டதாலும் பார்வையாளர்களுக்கு இதுவும் "போர்" அடிக்கத் தொடங்கியது.
சில இசை நிகழ்ச்சிகள் மட்டுமே சிறப்பாக இருந்தன. ஆனால், அவை மேடையில் நடத்தப்படவில்லை. மாறாக செய்ன் ஆற்றங்கரையோரத்தில் இருந்த பல்வேறு இடங்களில் நடந்தன. மழைக்கு நடுவே அதை படம் பிடித்த கேமராவின் ஸ்க்ரீன் மழை நீரால் தெளிவாக காட்சிகளை படம் பிடிக்கவில்லை. அதனால், அந்த நிகழ்ச்சிகள் நன்றாக இருந்த போதும் தெளிவாக பார்க்க முடியாமல் அதிருப்தி அடைந்தனர் பார்வையாளர்கள்.
2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழா விளையாட்டுக்களை முக்கியத்துவப்படுத்தும் வகையிலும் இல்லாமல், பாரிஸ் நகரத்தை மையப்படுத்த நினைத்து அதையும் செய்யாமல், வீரர்கள் அணிவகுப்பையும் சரியாக செய்யாமல் சொதப்பலாக நடந்து முடிந்தது. உலகெங்கிலும் இருந்த ரசிகர்கள் நேரலையில் இந்த கந்தரகோலமான நிகழ்ச்சிகளை பார்க்க முடியாமல் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *