ஒலிம்பிக் தொடரின் முதல் நாள் முதல் போட்டியே ரகளையுடன் தொடங்கியது!

top-news
FREE WEBSITE AD

ஒலிம்பிக் தொடரில் அர்ஜென்டினா - மொராக்கோ அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியின் போது திடீரென ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக கிட்டத்தட்ட 2 மணி நேரம் ஆட்டம் ஒத்தி வைக்கப்பட்டு மூடப்பட்ட மைதானத்தில் வீரர்கள் விளையாட வைக்கப்பட்டனர்.

ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா நாளை நடக்கவிருந்தாலும் விளையாட்டு போட்டிகள் நேற்றிரவு முதலே தொடங்கியது. வழக்கமாக கால்பந்து போட்டிகளில் சில நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கிவிடும். அந்த வகையில் நள்ளிரவில் நடந்த முதல் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றிருந்த உலகக்கோப்பை சாம்பியனான அர்ஜென்டினா அணியை எதிர்த்து மொராக்கோ அணி களமிறங்கியது.

இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே அர்ஜென்டினா அணி வீரர்கள் கோல் அடிப்பதில் தீவிரமாக இருந்தனர். ஆனால் முதல் பாதியின் கடைசி நிமிடத்தில் மொராக்கோ அணியின் ரஹிமி முதல் கோலை அடிக்க அடுத்த சில நிமிடங்களில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட ரஹிமி, மொராக்கோ அணிக்காக 2வது கோலை அடித்தார்.

இதன் மூலமாக மொராக்கோ 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் 68வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் சிமோன் அந்த அணிக்காக முதல் கோலை அடிக்க, இதனால் ஆட்டம் 2-1 என்ற பரபரப்பான கட்டத்திற்கு சென்றது. இந்த நிலையில் ஆட்டத்தின் கூடுதல் நிமிடத்தில் அர்ஜென்டினா அணி ஒரு கோலை அடித்தார். இதனால் ஆட்டம் 2-2 என்ற நிலைக்கு வந்தது.

இதனை ஏற்க முடியாத மொராக்கோ அணியின் ரசிகர்கள் திடீரென மைதானத்திற்குள் படையெடுத்தனர். இதனால் ஆட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ரசிகர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்ட பின், 2 மணி நேரத்திற்கு பின் ஆட்டம் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் வீரர்கள் அனைவரும் சில நிமிடங்கள் பயிற்சியில் ஈடுபட்ட பின்னர் மீண்டும் களம் புகுந்தனர். அப்போது விஏஆர் தொழிற்நுட்பம் மூலம் அர்ஜென்டினா அணி அடித்த கோல் ரிவ்யூ செய்யப்பட்டது. அதில் அர்ஜென்டினா அடித்த கோல் ஆஃப் சைட் என்று அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் இரு அணி வீரர்களும் எஞ்சியுள்ள நிமிடங்களை விளையாடி ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். ஒலிம்பிக் தொடரின் முதல் நாள் முதல் போட்டியே ரகளையுடன் தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *