முதன்முதலில் நீரில் தொடக்க விழா- களைகட்ட போகும் பிரான்ஸ் ஒலிம்பிக் தொடர்!

top-news
FREE WEBSITE AD

உலகின் மிகப்பெரிய பாரம்பரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் தொடர் வரும் 26 ம் தேதி முதல் ஆகஸ்ட் 11 வரை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கொண்டாடப்படவுள்ளது.

1924- ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. 100 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒலிம்பிக் திருவிழாவை நடத்த பிரான்ஸ் தயாராகவுள்ளது. லண்டனுக்கு பிறகு 3வது முறையாக ஒலிம்பிக் தொடரை நடத்தும் நாடு என்ற பெருமையையும் வசப்படுத்தியுள்ளது பாரிஸ்.

1924 பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் நிறைவு விழா நடந்த ஜூலை 26ம் தேதியே இந்த ஆண்டும் ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா களைகட்டவுள்ளது. 100 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் தொடரை நடத்துவதால் உலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு தொடக்க விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.  ஜூலை 26 ஆம் தேதி தொடக்க விழா நடைபெற உள்ளது.

ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல் முறையாக தண்ணீரில் தொடக்க விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. புகழ்பெற்ற ஈஃபிள் டவர் அருகில் உள்ள Seine நதியில் தொடக்கவிழா நடைபெறுகிறது. இந்த நதியை சுத்தப்படுத்த பிரான்ஸ் அரசு 12,522 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது.

Seine நதியில் நடைபெறும் தொடக்கவிழாவில் படகில் அந்தந்த நாடுகளை சேர்ந்த வீரர்கள் தங்கள் நாட்டு தேசிய கொடியை ஏந்தி அணிவகுப்பு நடத்த உள்ளனர்.

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் 206 நாடுகளில் இருந்து 10, 672 வீரர்கள் பதக்கத்திற்காக பலப்பரீட்சை நடத்தவுள்ளனர். 32 வகையான விளையாட்டுகள், 329 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. ஒலிம்பிக் தொடருக்கான ஏற்பாடுகள், கொண்டாட்டங்கள் ஒரு புறம் இருக்க, விமான கட்டணம், தங்கும் விடுதிகள் என அனைத்து இடங்களிலும் கட்டணம் பலமடங்கு அதிகரித்துள்ளது.

உலகின் மிக முக்கிய சுற்றுலா தளமாகவும் பிரான்ஸ் திகழ்வதால், ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் வழக்கமாகவே மக்கள் வருகை அதிகமாக இருக்கும் இந்நிலையில் ஒலிம்பிக் தொடரும் களைகட்ட இருப்பதால் இந்த ஆண்டு கூடுதலாக 2 முதல் 3 மில்லியன் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இச்சமயத்தில் பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் தொடரை காண இதுவரை 10 மில்லியன் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2016 ரியோ ஒலிம்பிக், 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடர்களை ஒப்பிடுகையில் கூடுதலாக 2 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *