பினாங்கு தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கால்பந்து விளையாட்டுத் துறை வளர்ச்சிக்காக 200 கால்பந்துகள்!
- Muthu Kumar
- 21 Oct, 2024
பட்டர்வொர்த், அக். 21-
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் ஏற்பாட்டில் பினாங்கு மாநிலத்தில் உள்ள 28 தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கால்பந்து விளையாட்டுத் துறை வளர்ச்சிக்காக 200 கால்பந்துகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி பாகான் பெலாசா தங்கும் விடுதியில் சிறப்பாக நடைபெற்றது.
70,000 வெள்ளி செலவில் பினாங்கு கால்பந்து சங்கம் ஷேக்கினாபிஆர் நிறுவனம் ஆகியவற்றின் நிதி உதவியின் பேரில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து வளர்ச்சி திட்டத்துக்கு நிதி உதவி வழங்கி ஆதரவளித்ததாக ஏற்பாட்டுக்குழு தலைவரும், பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவருமான செனட்டர்,டாக்டர் ஆர்.லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.
பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம் அதன் தலைவர் ஆர்எஸ்என்.ராயார் தலைமையில் இந்துக்களின் கல்வி,பொருளாதாரம் சமூக உதவிகளை வழங்கி வருவதாக விவரித்த செனட்டர் ஆர்.லிங்கேஸ்வரன் உயர் கல்வி பயில வசதி குறைந்த மாணவர்களுக்கு நிதி உதவி அளிக்க பினாங்கு இந்து அறப்பணி வாரியம் பரிசீலனை செய்யத் தயாராக உள்ளது என விவரித்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்புப் பிரமுகராக கலந்துகொண்ட மலேசியக் கால்பந்து சங்கத்தின் தலைமை செயல் முறை அதிகாரி,கிரிஸ்தபர் ராஜ் தமது உரையில் பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம், பினாங்கு மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் கால்பந்து துறை வளர்ச்சிக்கு ஊக்குவிக்கும் பொருட்டு கால் பந்துகளை வழங்க முன்னெடுத்துள்ள திட்டத்துக்கு ஆதரவளித்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது என்றும்,இதன் மூலமாக இந்நாட்டில் கால்பந்து துறையில் சிறந்த இந்தியக் கால்பந்து வீரர்களை உருவாக்கப் பெரிதும் துணையாக இருக்குமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் உடன் உரையாற்றிய பாகான் நாடாளுமன்ற உறுப்பினரான லிம் குவான் எங் பாகான் நாடாளுமன்றத்தில் இரு கால்பந்து மைதானம் உள்ளன. அதில் ஒரு மைதானம் இளைஞர் விளையாட்டு அமைச்சின் ஆதரவில் 1 லட்சம் வெள்ளி நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. இதனுடன் பாகான் நாடாளுமன்றத்தில் பல்வகை அரசு நிறுவனங்கள் அடங்கிய யூடிசி அலுவலகம் ஒன்றைப் பிரதமர் பாகான் நாடாளுமன்றத்தில் பினாங்கு செண்டரில் இடம் பெறச் செய்துள்ள அறிவிப்பு கூடுதல் மகிழ்ச்சியான செய்தி என்பதுடன்,பாகான் நாடாளுமன்றம் உலகத் தரத்திலான வசதிகளைக் கொண்ட இடமாகவும்,அடுத்த இளம் தலைமுறையினர் பயன்படுத்தும் வகையில் அவ்வசதிகள் மேம்படுத்தப்படுமென அவர் உறுதியளித்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்புப் பிரமுகர்களாக பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், பாகான் ஜெர்மால் சட்டமன்ற உறுப்பினர் சீ யீ கீன்,பினாங்கு இந்து அறப்பணி வாரிய உறுப்பினர் டத்தோ எஸ்.பார்த்திபன், பினாங்கு தலைமையாசிரியர் மன்றத் தலைவர் செல்வகுமார் பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள்,ஆசிரியர்கள் மற்றும் அழைக்கப்பட்ட பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *