சென்னை நீலாங்கரை ஆழ்கடலில் 25 அடி நீளமுள்ள திமிங்கலம்!

top-news
FREE WEBSITE AD

சென்னை நீலாங்கரை ஆழ்கடலில் நேற்று மிதந்து கொண்டிருந்தார் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்தர்.நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது சுமார் 25 அடி நீளம் கொண்ட திமிங்கலம் தென்பட்டிருக்கிறது. அந்த திமிங்கலத்தின் அருகே நின்றபடி அவர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த காணொளி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

பூமியில் வாழும் மிகப்பெரிய உயிரினம் என்றால் அது திமிங்கலம் தான். திமிங்கிலங்கள் வெப்ப இரத்த நுரையீரலைக் கொண்டவை என்பதால், நுரையீரல் மூலமே மூச்சுவிடுகின்றன. திமிங்கிலங்களை பொறுத்தவரை நீரில் வசிக்கும் உயிரினம் என்றாலும், மற்ற மீனினங்களை போல செவுள்களால் சுவாசிக்காது. மனிதர்களை போலவே நுரையீரலைக் கொண்டிருக்கும். இதன் காரணமாக எப்பொழுதெல்லாம் சுவாசிக்க வேண்டுமோ அப்பொழுதெல்லாம் நீரின் மேற்பரப்புக்கு வந்து காற்றை அதன் மூக்கு வழியாக உள்ளிழுத்துச் செல்லும்.

திமிங்கிலங்களின் நுரையீரல் மிகவும் பெரியது என்பதால் நீரின் மேல்மட்டத்திற்கு வரும்போது தேவையான அளவு காற்றை, தலைப்பகுதியில் அமைந்துள்ள மூக்கின் வழியாக உள்ளிழுத்துக் கொண்டு நீரில் மூழ்குவது வழக்கம். நீரில் மூழ்கும்போது மூக்கு வழியாக நீர் உள்ளே நுழையாமல் இருக்க மூடியே இருக்கும். சில திமிங்கிலங்களில் ஒரு துளை உள்ள மூக்கையும், சில வகை இரு துளை மூக்கையும் கொண்டிருக்கும்.

திமிங்கிலங்களில் 75 வகைகள் உள்ளன. உலகிலுள்ள உயிரினங்களுள் மிகப்பெரியதாக வளரக்கூடிய இனமாக நீலத் திமிங்கிலம் திகழ்கிறது. இது சுமார் 100 அடி நீளமும் 150 டன் எடையுள்ளதாகவும் வளரக்கூடியது ஆகும் . நீலத் திமிங்கிலத்தின் நாக்கில் 50 பேர் உட்காரக்கூடிய அளவு இடமிருக்கும் என்று கூறுவார்கள். அதேநேரம் திமிங்கிலத்திடம் மூர்க்கமான குணங்கள் கிடையாது. இவை மிகவும் சாதுவானவை என்று சொல்கிறார்கள். பொதுவாக திமிங்கிலங்கள் 70 ஆண்டுகள் வரை வாழக்கூடியவையாகும். அதிக உடல் எடையைக் கொண்ட திமிங்கிலங்கள் மிகவும் வேகமாக நீந்தக்கூடியவையாகும்.

திமிங்கிலங்களில் ஒவ்வொரு வகையும் வெவ்வேறு நேர அளவுகள் மூச்சை அடக்கும் திறமையுள்ளவை ஆகும். இதில் ஒரு வகை திமிங்கலம் 90 நிமிடங்கள் மூச்சையடக்க கூடியதாக இருக்கும். இன்னொரு வகை திமிங்கலம் இரண்டு மணி நேரமும் மூச்சையடக்கும் திறனும் பெற்றவையாக இருக்கின்றன. மனிதர்களால் ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடத்திற்கு மேல் மூச்சை அடக்கமுடியாது என்கிற நிலையில், திமிங்கலங்கள் மணி கணக்கில் மூச்சை அடக்க முடியும் என்பதால் ஆழ்கடலில் போய் இரை தேடுவதை வாடிக்கையாக வைத்துள்ளது. சென்னையிலும் ஆழ்கடலில் திமிங்கலங்கள் உள்ளன. ஆனால் அவற்றை பார்ப்பது அபூர்வமாகும்..

இந்நிலையில் சென்னை நீலாங்கரை ஆழ்கடலில் நேற்று ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்தர் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவர் பக்கத்திலேயே 25 அடி நீளமுள்ள திமிங்கலம் கடந்து சென்றுள்ளது. அதை காணொளி எடுத்து வெளியிட்டுள்ளார். திமிங்கலத்தின் அருகே நின்றபடி அவர் பேசும் காணொளி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *