250 மாணவர்கள் பங்கு பெற்ற பேராக் மாநில போர்க்கலை சிலம்பம் போட்டி!
- Muthu Kumar
- 25 Sep, 2024
ஈப்போ, செப்.25-
பேராக் மாநில போர்க்கலை சிலம்பம் போட்டியில் 250 மாணவர்கள் பங்கு பெற்றனர். இப்போட்டிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தம்புன் நாடாளுமன்ற தொகுதியின் மக்கள் சேவை மையம் முழுமையான ஆதரவு வழங்கியதாக பேராக் போர்க்கலை சிலம்பக் கழகத் தலைவர் மாஸ்டர் எம்.குணாளன் கூறினார்.
முதல் முறையாக நடைபெறும் இப்போட்டியில் இந்திய பெற்றோர்கள், பள்ளிகள் மற்றும் இயக்கங்கள் வற்றாத ஆதரவு வழங்கியுள்ளனர். இவர்களின் ஆதரவிற்கு அவர் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
அதுமட்டுமின்றி, இந்த போர்க்கலை சிலம்பப் போட்டிக்கு பேராக் மாநில கல்வி இலாகாவும், மாவட்ட கல்வி இலாகாவினரும் ஆதரவு வழங்கினர். அத்துடன், நமது அழைப்பை ஏற்று கல்வி அதிகாரிகளும் இவ்விளையாட்டை நேரில் காண வந்துள்ளனர் என்று அவர் மகிழ்வுடன் கூறினார்.
இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் வயதிற்கேற்ப 3 பிரிவுகளாக விளையாடுவார்கள். குறிப்பாக, 7முதல் 10 வயது ஒரு பிரிவாகும். 11 வயது முதல் 15 வயது வரை மற்றொரு பிரிவாகும். 16 முதல் 19 வயது வரை சீனியர் பிரிவாகும்.இப்போட்டிகளில் ஆண்களும் பெண்களும் விளையாடி தங்கள் திறமைகளை வெளிகொணர்ந்துள்ளனர் என்று அவர் பாராட்டினார்.
காலை 8.00 மணிக்கு தொடங்கப்பட்ட இப்போட்டி மாலை 7.00 மணிக்கு முடிவடைந்தது. இந்நிகழ்வின் நிறைவுவிழாவில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசுகளும் சான்றிதழும் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர். இந்த போர்க்கலை சிலம்பத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் மாஸ்டர் எம். குணாளனை தொடர்புக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *