26ஆவது ஜெ. கணபதி சுழல் கிண்ணத்தை வென்ற ஜொகூர் பாரு ஏ கால்பந்து அணி!
- Muthu Kumar
- 16 Oct, 2024
கோகி கருணாநிதி
ஜொகூர் பாரு, அக்.16-
ஜொகூர் பாருவில் அக்டோபர் 11 முதல் 13 வரை நடைபெற்ற 26ஆவது ஜெ. கணபதி சுழல் கிண்ணத்திற்கான கால்பந்து போட்டி, பாசிர் கூடாங் மாநகர சபை மைதானத்தில் மிகுந்த உற்சாகத்துடன் நடந்து முடிந்தது. இந்த கிண்ணம் 1979ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, இந்திய கால்பந்து வீரர்களுக்கிடையே பெரும் ஆவலை ஏற்படுத்திய ஒரு முக்கியமான மாநிலத்திற்கான போட்டியாக விளங்குகிறது. இதன் மூலம், ஜொகூர் இந்திய கால்பந்து சங்கம் (ஜிஃபா) இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்போட்டியை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
ஜிஃபா தலைவரும், ஜொகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான கே. ரவீன் குமார், அக்டோபர் 11 ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஜொகூர் பாருவில் உள்ள 'லீ கார்டன் தங்கும் விடுதி உணவகத்தில் அதிகாரபூர்வமாக இந்த ஆண்டு கிண்ணத்துக்கான போட்டியைத் துவக்கி வைத்தார்.
இந்த 26ஆவது ஜெ. கணபதி கிண்ணம் 23 வயதிற்குட்பட்ட வீரர்களுக்கானதாகவும், போட்டி இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நடைபெற்றது. முதல் பிரிவில் ஜொகூர் பாரு, குளுவாங், சிகாமட் ஆகிய அணிகள் இடம் பெற்றன. இரண்டாவது பிரிவில் கூலாய், கோத்தா திங்கி, ஜொகூர் பாரு ஏ ஆகிய அணிகள் போட்டியிட்டன. அணிகள் தங்களின் தகுதி சுற்றுகளைச் சரியாக முடித்த நிலையில், இறுதியில் கோத்தா திங்கி மற்றும் ஜொகூர் பாரு பி அணிகள் மூன்றாம் இடத்திற்காக மோதின. இதில், கோத்தா திங்கி அணி மூன்றாம் இடத்தைப் பெற்றது. ஜொகூர் பாரு பி அணி நான்காம் இடத்தைப் பெற்றது.
இறுதி போட்டியில் ஜொகூர் பாரு ஏ மற்றும் குளுவாங் அணிகள் மோதின. கடுமையான போட்டியின் போது, ஜொகூர் பாரு ஏ அணி 5-1 என்ற கோல் கணக்கில் குளுவாங் அணியை வீழ்த்தி, 26ஆவது ஜெ. கணபதி சுழல் கிண்ணத்தை வென்றது. இந்த வெற்றியால் ஜொகூர் பாரு ஏ அணியினர் பெருமிதம் அடைந்தனர்.
இந்த போட்டியின் சிறந்த ஆட்டக்காரராக ஜொகூர் பாரு ஏ அணியைச் சேர்ந்த ந. பிரவினேஷ்வரன் தேர்வு செய்யப்பட்டார். அதிக கோல்கள் அடித்த ஆட்டக்காரர்களாக குளுவாங் அணியைச் சேர்ந்த செ. நேசமணியும், ஜொகூர் பாரு ஏ அணியைச் சேர்ந்த லோ. பிரவின் குமாரும் தேர்வாகினர்.வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா ஜெ.டி.தி மேம்பாட்டு மேலாளர் கே. சுகுமாரன் தலைமையில் நடைபெற்றது.
நான்காம் இடத்தைப் பெற்ற அணிக்கு கோப்பை. பதக்கம், 300 வெள்ளி ரொக்கம் வழங்கப்பட்டது. மூன்றாம் இடத்தைப் பெற்ற அணிக்கு கோப்பை, பதக்கம், 500 வெள்ளி ரொக்கம் வழங்கப்பட்டது. இரண்டாம் இடத்தைப் பெற்ற அணிக்கு கோப்பை, பதக்கம் மற்றும் ரி.ம 1000 வெள்ளி ரொக்கம் வழங்கப்பட்டது. முதல் இடத்தைப் பெற்ற ஜொகூர் பாரு ஏ அணிக்கு கிண்ணம், கோப்பை, பதக்கம், 2000 வெள்ளி ரொக்கம் வழங்கப்பட்டது. இவற்றுடன், ஜொகூர் மாநில அளவிலான இந்த போட்டியின் சிறந்த வீரர்கள், தேசிய அளவில் நடைபெறும் பரதன் சுழல் கிண்ணத்திற்கான கால்பந்து போட்டிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் ஜிஃபா துணைத்தலைவர் குணா தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *