ஜொகூரில் 26ஆவது ஜி. கணபதி சுழல் கிண்ணத்திற்கான கால்பந்து போட்டி!
- Muthu Kumar
- 04 Oct, 2024
ஜொகூர் பாரு, அக்.4-
26ஆவது ஜி. கணபதி சுழல் கிண்ணத்திற்கான கால்பந்து போட்டி, 2018 ஆம் ஆண்டு கடைசியாக நடைபெற்ற பிறகு, மீண்டும் நடத்தப்பட உள்ளது. கோவிட் - 19 காரணமாக பல ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்ட இந்த போட்டி இம்மாதம் அக்டோபர் 11 முதல் 13 வரை ஜொகூரில் உள்ள பாசிர் கூடாங் மாநகர சபை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
1979ஆம் ஆண்டில் தொடங்கிய ஜி. கணபதி கிண்ணம், ஜொகூர் மாநில மாவட்டங்களுக்கிடையிலான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கால்பந்து போட்டிகளில் ஒன்றாகும், குறிப்பாக இந்திய கால்பந்து வீரர்கள் மத்தியில் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது என ஜொகூர் இந்திய கால்பந்து சங்கத் துணைத்தலைவர் குணா குறிப்பிட்டார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டில் போட்டி மறுதொடக்கம் காண்கிறது, அதற்கு ஜொகூர் இந்திய கால்பந்து சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜொகூர் ஆட்சிக்குழு உறுப்பினர் கே. ரவீன் குமாரின் ஆதரவும் வழிகாட்டலும் இருந்தது.
இந்திய சமூகத்திற்கிடையிலான கால்பந்து விளையாட்டினை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில் அவரது நேரடி பங்களிப்பு காரணமாக, இந்த போட்டி உள்ளூர் கால்பந்திற்கு உயிரூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கே. ரவீன் குமார் அக்டோபர் 11, 2024 அன்று இரவு 8 மணிக்கு தொடக்க போட்டியினைத் துவக்கி வைப்பார் என திட்டமிடப்பட்டுள்ளது.
ஜொகூர் பாரு, கூலாய், கோத்தாதிங்கி, குளுவாங் மற்றும் சிகாமட் ஆகிய ஐந்து மாவட்டங்களிலிருந்து போட்டியாளர்கள் கலந்துகொண்டு, அவர்கள் சாம்பியன் பட்டத்தை பெறுவதற்கான ஆவலை வெளிப்படுத்தவுள்ளனர். இருப்பினும், பொந்தியான், மெர்சிங், பத்து பகாட், மூவார் மற்றும் தங்காக் மாவட்டங்களில் போட்டியாளர்களின் குறைபாடு காரணமாக அவர்கள் இந்த ஆண்டு போட்டியில் பங்கேற்க இயலவில்லை.
அதே சமயத்தில், போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து வீரர்களும் தங்களது திறமைகளை முழுமையாக வெளிப்படுத்துவார்கள் என்பதில் அனைவரும் உறுதியாக உள்ளனர் என்றார். இந்த போட்டி ஜொகூர் இந்தியர் கால்பந்து சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, இந்திய சமூகத்திடையே கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் முக்கிய பணியை செய்கிறது. மேலும், இந்த போட்டியின் நடுவரால் தேர்வு செய்யப்படும் திறமையான வீரர்கள் பரதன் சுழல் கிண்ணத்திற்காக ஜொகூரின் சார்பில் விளையாடத் தேர்வு செய்யப்படுவார்கள், இது உயர் நிலைத் தரத்திலான கால்பந்து போட்டியாகும். இத்துடன், இளம் வீரர்கள், தங்களது திறமையை வெளிப்படுத்தி, மேலும் உயர்ந்த நிலையினை அடையும் வாய்ப்பை வழங்குகிறது எனத் தெரிவித்தார்.
ஜி. கணபதி கால்பந்து போட்டி வெற்றி பெறுவதற்கான போட்டி மட்டுமல்ல, இது ஜொகூர் இந்திய சமூகத்தில் ஒற்றுமையையும், விளையாட்டுச் சிந்தனையையும் வளர்க்க உதவுகின்றது. இந்தப் போட்டி மீண்டும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால், பல ஆண்டுகளுக்குப் பிறகு கால்பந்து விளையாட்டின் ஆர்வத்தை மீண்டும் உருவாக்கி, தொய்வடைந்த விளையாட்டை மீண்டும் நிலைநாட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியைக் காண மக்கள் அனைவரும் பாசிர் கூடாங் மாநகர சபை மைதானத்திற்கு வருமாறு அழைக்கப்படுகின்றனர்.
ஜி. கணபதி கிண்ணப் போட்டி 23 வயதுக்கு கீழ் இரண்டு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பிரிவும் அவர்களது மாவட்டங்களின் சார்பில் போட்டியில் பங்கேற்கும் மூன்று அணிகளை கொண்டுள்ளது. அணிகள் பிரிவு A மற்றும் பிரிவு B ஆக பிரிக்கப்பட்டுள்ளன. பிரிவு A-வில் ஜொகூர் பாரு B, குளுவாங் மற்றும் சிகாமட் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. பிரிவு B-வில் கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜொகூர் பாரு A அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த அணிகள் தங்களது பிரிவுகளில் சிறந்த இடத்தைப் பெற ஆடுவதுடன், ஒவ்வோர் ஆட்டமும் கடுமையாகவும், கவர்ச்சிகரமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *