மலேசிய பூப்பந்து விளையாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் மகாலட்சுமி, ஜோதிலட்சுமி!
- Muthu Kumar
- 11 Nov, 2024
கோலாலம்பூர், நவ. 11-
மலேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற தேசிய நிலையிலான லீகா சுக்கான் யூனிட்டி கண்காட்சி விளையாட்டுப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் வாகை சூடினர். டாமன்சாராவைச் சேர்ந்த அரவிந்தன் - கவிதா தம்பதியரின் புதல்விகளான அ.மகாலட்சுமி, அ.ஜோதிலட்சுமி இருவரும் பூப்பந்து விளையாட்டில் அதிரடி காட்டியுள்ளனர்.
செல்வி அ.மகாலட்சுமி 17 வயதுக்கு கீழ்ப்பட்ட பெண்கள் இரட்டையர் பிரிவில் தன் ஆட்டத்திறமையை வெளிப்படுத்தியதோடு எதிரணியினரை திக்குமுக்காடச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அவருக்கு முதல் பரிசான 1,200 வெள்ளிக்கான காசோலை வழங்கப்பட்டது.மற்றொரு போட்டியாளரான பூப்பந்து விளையாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் அ.ஜோதிலட்சுமி,கலப்பு இரட்டையர் பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து 300 வெள்ளியை வென்றார்.
எதிர்காலத்தில் சிறந்த பூப்பந்து விளையாட்டாளர்களாகத் திகழப்போவதாகக் கூறும் மகாலட்சுமி, ஜோதிலட்சுமி இருவரும் நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பெருமை தேடித்தரப்போவதாகக் கூறினர்.
டாமன்சாரா வட்டாரத்தில் நன்கு அறிமுகமானவரான இலட்சியவாதி பெரியவர் ப.சின்னையா - வள்ளியம்மை இணையரின் கொள்ளுப் பேத்திகளான, மகாலட்சுமி - ஜோதிலட்சுமி இருவரின் தாத்தா - பாட்டி சி.இளம்சந்திரன் - பூங்கோதை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, டாமன்சாரா சமூக சேவையாளர் சி.இளஞ்செழியனின் 3ஆவது அண்ணனின் பேத்திகள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.இதனிடையே விளையாட்டாளர்களான மகாலட்சுமி, ஜோதிலட்சுமி இருவரையும் இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சு அடையாளம் கண்டு ஊக்குவிக்க வேண்டும் என்று சமுதாயப் பற்றாளர்கள் கேட்டுக் கொண்டனர்.
ஒற்றுமைத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போட்டி அனைவரின் பார்வையையும் ஈர்த்துள்ளதால் மேற்கண்ட இரண்டு நம்பிக்கை நட்சத்திரங்களையும் அமைச்சு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *