தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அமெரிக்கா பயணம்!
- Muthu Kumar
- 29 Aug, 2024
தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சான் பிரான்சிஸ்கோவில் இன்று நடக்கும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
தமிழகத்திற்கு பல்வேற முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்காவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ, சிகாகோவில் உள்ள பல முக்கிய நிறுவனங்களின் தொழிலதிபர்களைச் சந்திக்கிறார். அப்போது முதல்வரின் தலைமையில் முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் கிளம்பிய முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து சான் பிரான்சிஸ்கோ சென்றுள்ளார். சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, திமுக முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன் உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினை வரவேற்றனர். நெப்போலியன் தற்போது அமெரிக்காவில் குடும்பத்தோடு வசித்து வரும் நிலையில் அவர் முதல்வர் ஸ்டாலினை விமான நிலையத்திற்கே வந்து வரவேற்றுள்ளார்.
அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் அங்கே செப்டம்பர் 2 ஆம் தேதி வரை தங்கியிருப்பார். சான்பிரான்சிஸ்கோவில் இன்று நடைபெறும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றுகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அப்போது, தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வரும்படி முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுக்க உள்ளார். இந்தச் சந்திப்பின்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
தொடர்ந்து, ஆகஸ்ட் 31 ஆம் தேதி புலம்பெயர்ந்த தமிழக மக்களை சந்தித்து முதலமைச்சர் கலந்துரையாடுகிறார். அதன்பின் செப்டம்பர் 2 ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ செல்கிறார். சிகாகோ செல்லும் அவர் செப்டம்பர் 11 வரை அங்கே தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கிறார். குறிப்பாக அங்கு, பார்ச்சூன் 500 பட்டியலில் உள்ள சர்வதேச முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுடன் பேசுகிறார்.
செப்டம்பர் 7 ஆம் தேதி 'வணக்கம் அமெரிக்கா' என்ற பெயரிலான அயலக தமிழர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் ஸ்டாலின் பங்கேற்கிறார். இதில் பல்வேறு தொழிலதிபர்கள், சர்வதேச தமிழ் பிரபலங்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். மீண்டும் செப்டம்பர் 12 ஆம் தேதி புறப்பட்டு சென்னை திரும்புகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அமெரிக்கா புறப்படுவதற்கு முன்பாக சென்னையில் பேட்டி அளித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க இது போன்ற பயணங்களை நான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன் என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். ஏற்கனவே, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான்,ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்குப் பயணங்கள் மேற்கொண்டதன் மூலமாகத் தமிழ்நாட்டிற்கு பல்வேறு முதலீடுகள் வந்திருக்கிறது.
இந்தப் பயணங்கள் மூலமாக 18,521 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 10,882 கோடி ரூபாய் மதிப்பிலான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இந்த அமெரிக்க பயணத்தின் போது அமெரிக்க வாழ் தமிழர்களைச் சந்திக்க இருக்கிறேன். எல்லோருடைய வாழ்த்துகளோடும் இந்தப் பயணம் நிச்சயமாக வெற்றிகரமானதாக அமையும்" எனத் தெரிவித்திருந்தார்.
அமெரிக்கா சென்றடைந்த முதல்வர் ஸ்டாலினை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா "Eagle has landed" என எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *