துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியின் 11ஆவது விளையாட்டுப் போட்டி அலையென திரண்ட பெற்றோர்கள்!
- Muthu Kumar
- 11 Sep, 2024
சுபாங் ஜெயா, செப்.11- சுபாங் ஜெயா வட்டாரத்தில் பிரசித்தி பெற்ற பள்ளியும் நாட்டின் தூரநோக்குப் பள்ளியுமான துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியில் கடந்த 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 11ஆவது விளையாட்டுப் போட்டி விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு அலையென திரண்டு வந்து நல்லாதரவு வழங்கியிருந்த பெற்றோரின் பங்கு அளப்பரிது.
விழாவினைச் சிறப்பிக்க கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரி பாலமுரளியின் வருகை முத்தாய்ப்பாய் அமைந்தது. பள்ளி நிர்வாகமும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் இணைந்து இப்படி ஒரு சிறப்பான விழாவினை ஏற்பாடு செய்திருப்பது தமக்குப் பெருமிதம் அளிப்பதாக பாலமுரளி கூறினார். இப்பள்ளியின் வளர்ச்சியும் சமூகத்தின் வளர்ச்சியில் இதன் பங்கும் நிச்சயம் கல்வி அமைச்சரின் பார்வைக்குக் கொண்டு செல்லப்படும் என்றும் உறுதி கூறியதோடு தமது நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோன்சன் மதலைமுத்துவின் உரையில் இப்பள்ளி நாட்டில் செயல்படும் ஆறு வாவாசான் பள்ளிகளில் ஒரே ஒரு மூவின பள்ளியாக இருப்பதை நினைவு கூர்ந்தார். எங்கும் இல்லாத சிறப்பாக இங்கு மட்டும் மூவினமும் இணைந்து ஒரே வளாகத்தில் சிறப்பாக இயங்குவதைச் சுட்டிக் காட்டி இதுவே நமது பலமாகவும் மாணவர்களின் அடைவுநிலைக்கு உரமாகவும் இருப்பதாகக் கூறினார். இப்பள்ளியில் மேலும் அதிகமான மாணவர்கள் சேர்ந்திட விண்ணப்பிப்பதும் பள்ளியின் தர அடைவுநிலை மேம்பாட்டிற்கு வகை செய்யும் என்று கூறினார்.
இப்பள்ளியின் வளர்ச்சிக்குப் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மிகுந்த பக்க பலமாக இருப்பதாக கூறினார். தலைவர் பாலகிருஷ்ணன் தமது உரையில் சங்கம் என்றும் தனது நல்லாதரவை வழங்கிடும் என்றும் மாணவரின் அடைவுநிலையும்,பள்ளியின் முன்னேற்றமுமே தமது குறிக்கோள் என்றும் கூறினார். பெற்றோரின் முழு ஒத்துழைப்பும் ஒருமித்த நல்லாதரவும் தமக்கு மேலும் உற்சாகமளிப்பதாகக் கூறினார்.
பெற்றோர் ஆசிரியர் சங்கத்தோடு இணைந்து பள்ளி நிர்வாகம் மிகச் சிறப்பான முறையில் விளையாட்டுப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. இவ்விழாவினை வழிநடத்திக் கொண்டிருக்கும் பள்ளியின் புறப்பாட நடவடிக்கைப் பிரிவு துணைத் தலைமை ஆசிரியர் கலையசரனுக்குத் தமது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
கல்வி அமைச்சின் கல்விக் கொள்கைக்கு ஏற்ப ஒவ்வொரு மாணவரின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு பல போட்டிகள் நடத்தப்பட்டன. இவற்றில் பங்கு
பெற்ற மாணவரும் எந்த கோப்பை இன்றி போகக் கூடாது என்ற கொள்கை சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. மஞ்சள். பச்சை, நீலம் மற்றும் சிவப்பு வண்ண இல்லக் கூடாரங்கள் அலங்கார கோலம் பூண்டிருந்தன. மாணவர்கள் பழங்களின் கருப்பொருளோடு அணிவகுத்து பவனி வந்தது சிறப்பைக் கூட்டியது. உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு வீசுதல், ஈட்டி எறிதல், குழு விளையாட்டு, 50 முதல் 400 மீட்டர் வரையிலான நேரோட்டம் என பல விளையாட்டுகள் மாணவர்கள் மத்தியில் கோலாகலத்தை உண்டாக்கின. அவர்களின் மகிழ்ச்சி ஆரவாரம் உற்சாக மேளமாக ஒலித்தது.
சிறந்த விளையாட்டு வீரராக செல்வன் பாலமோகனும், வீராங்கனையாக செல்வி நறுமுகை பிரேம்குமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டோட மாணவர்கள் உற்சாகக் களிப்பில் வீடு திரும்பினர். பெற்றோரோடும் ஆசிரியர்களோடும் சுயம்படம் எடுத்துக் கொண்டும் குழுப்படம் எடுத்துக் கொண்டும், விடைபெற்றது அடுத்த ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிக்கு நாங்கள் இப்பவே தயார் என்று சொல்வது போல் அமைந்தது.
இறுதியில் மஞ்சள் இல்லம் சுழல் கோப்பையை வென்றது. நீல இல்லம் இரண்டாவது, மூன்றாவதாக சிவப்பு மற்றும் நான்காவதாக பச்சை இல்லமும் இடம் பிடித்தன. மிகச் சிறிய சொற்ப வித்தியாசங்களில் இருந்த புள்ளி விவரப் பட்டியல் விளையாட்டின் தரத்தையும் விளக்கியது எனலாம்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *