டத்தோ அசஹார் சூப்பர் லீக் கிண்ண கால்பந்து இறுதி ஆட்டத்தில் ஜெண்டராட்டா அணி கோப்பையை கைப்பற்றியது!
- Muthu Kumar
- 27 Sep, 2024
தெலுக் இந்தான், செப்.
கடந்த செப் 27 ஆம் தேதி மாலை 4.45 மணிக்கு இங்குள்ள ஊராட்சி மன்ற விளையாட்டரங்கில் நடைபெற்ற டத்தோ அசஹார் சூப்பர் லீக் கிண்ண கால்பந்து இறுதி ஆட்டத்தில் ஜெண்டராட்டா அணியும், இந்தான் ரோவர்ஸ் அணியும் சந்தித்து இரு அணியுமே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தின. ஆனாலும், ஜெண்டராட்டா அணி 6-2 என கோல்களைப் புகுத்தி வெற்றிக் கிண்ணத்துடன் ரொக்கம் 7 ஆயிரத்தையும் தட்டிச் சென்றது. இரண்டாம் நிலையில் வந்த இந்தான் ரோவர்ஸ் அணிக்கு இரண்டாம் நிலைக்கான வெற்றிக் கிண்ணமும், ரொக்கம் 4 ஆயிரம் வெள்ளியும் வழங்கப்பட்டது.
கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த சூப்பர் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் 2024 ஆண்டுக்கான நடைபெற்ற இறுதிப்போட்டியில் 7ஆவது தடவையாக சந்திக்கும் இந்தான் ரோவர்ஸ் அணி வெற்றிக் கிண்ணத்தை வாகை சூடும் என்னும் பார்வையாளர்களின் கனவை அந்தபணி ஆட்டக்காரர்கள் கலைத்து விட்டனர்.
முதல் பாதி ஆட்டத்தில் இந்தான் ரோவர்ஸ் அணியினர் ஆதிக்கம் செலுத்தி வந்தபோதும் கோல் போடுவதில் ஜெண்டராட்டா அணி தீவரம் செலுத்திய நிலையில் ஆட்டம் தொடங்கி 6ஆவது நிமிடத்தில் தனது முதல் கோலை அடித்தது. அடுத்து 19ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலைப் அடித்து 2-0 என்னும் நிலையில் முன்னேறியது. அடுத்த 20 நிமிடத்தில் இந்தான் ரோவர்ஸ் அணி முதல் கோலை அடித்து ஆட்டத்தை 2.1 என்னும் கோல்கணக்கில் கொண்டுவந்தது.
36ஆவது நிமிடத்தில் ஜெண்டராட்டா அணி மற்றொரு கோல் அடித்து 3-1 என்னும் நிலையில், ஆதிக்கம் செலுத்தியது. 40 நிமிடத்தில் ஜெண்டராட்டா தற்காப்பு ஆட்டக்காரர்களை ஏமாற்றி இந்தான் ரோவர்ஸ் அணி 2 வது கோலைப் புகுத்தியது. முதல் பாதி ஆட்டம் ஜெண்டராட்டா 3-2 கோல்களில் முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கி 50 வது நிமிடத்தில் ஜெண்டராட்டா அணி 4 வது கோலைப் அடித்து 4-2 என்னும் கோல் கணக்கில் முன்னேறியது.
தொடர்ந்து ஜெண்டராட்டா அணி 60ஆவது நிமிடத்தில் 5ஆவது கோலும், 78ஆவது நிமிடத்தில் 6ஆவது கோலும் அடித்து 6-2 என்னும் கோல் கணக்கில் ஜெண்டராட்டா அணி இந்தான் ரோவர்ஸ் குழுவைத் தோற்கடித்தது. ஆட்டத்தின் போது ஜெண்டராட் ஆட்டக்காரர்கள் யாரும் மஞ்சள் அல்லது சிவப்பு எச்சரிக்கை அட்டையைப் பெறவில்லை. ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்படவுமில்லை.
அதே வேளையில், இந்தான் ரோவர்ஸ் அணியில் ஒருவர் ஆட்டத்திலிருந்து நடுவரால் வெளியேற்றப்பட்டார். மேலும் 3 ஆட்டக்காரர்களுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 10 ஆட்டக்காரர்களோடு விளையாடிய இந்தான் ரோவர்ஸ் அணி பின் தங்கியது. ஜெண்டராட்டா அணியின் அபார விளையாட்டு அரங்கில் கூடியுள்ள பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *