ஈஷாவைப் பகடிவதை செய்ததாக இருவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்‌, ஜூலை 17-  டிக்‌ டாக்‌ பிரபலம்‌  ஈஷா @  ஏ.ராஜேஸ்வரியை இணையம்‌ வாயிலாக பகடிவதை செய்ததாக லோரி ஓட்டுநரான 43 வயது பி.சதீஷ்குமார் ‌மற்றும்‌ 34 வயது பி.ஷாலினி ஆகியோர்‌ மீது நீதிமன்றத்தில்‌ நேற்று குற்றம்‌ சுமத்தப்பட்டது.  “டூலால்‌ பிரதர்ஸ்‌ 360”எனும்‌ தன்னுடைய டிக்‌ டாக்‌ கணக்கு வாயிலாக மற்றவர்களின்‌ மனத்தைப்‌ புண்படுத்தும்‌ வகையில்‌ ஆபாசமான வாசகங்களை வேண்டுமென்றே வெளியிட்டதாக சதீஷ்குமார்‌ மீது செஷன்ஸ்‌ நீதிமன்றத்தில்‌ குற்றம்‌ சுமத்தப்பட்டது. கடந்த ஜூன்‌ மாதம்‌ 30ஆம்‌ தேதியன்று இரவு 10.12மணிக்கு அக்குற்றம்‌ புரியப்பட்டது என நீதிமன்றத்தில்‌ தெரிவிக்கப்பட்டது.

அந்த வாசகங்கள்‌ செந்தூலில்‌ வாசிக்கப்பட்டன. நீதிபதி சித்தி அமினா கஸாலி முன்னிலையில்‌ வாசிக்கப்பட்ட அக்குற்றச்சாட்டை சதீஷ்குமார்‌ ஒப்புக்‌ கொண்டார்‌. இணையவசதிகளை முறைகேடாகப்‌ பயன்படுத்தியதாக தொடர்பு மற்றும்‌ பல்லூடகச்‌ சட்டத்தின்‌ 233ஆவது பிரிவின்கீழ்‌ அவர்‌ மீது குற்றம்‌ சுமத்தப்பட்டுள்ளது. குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால்‌ ஒராண்டு வரைக்குமான சிறைத்தண்டனை, ஐம்பதாயிரம்‌ வெள்ளி அபராதம்‌ அல்லது இரண்டுமே சேர்த்து விதிக்க அச்சட்டத்தில்‌ இடமுள்ளது.

இதனிடையே, மற்றொரு நீதிமன்றத்தில்‌ ஷாலினிக்கு நூறு வெள்ளி அபராதம்‌ விதிக்கப்பட்டது.கோபத்தைத்‌ தூண்டும்‌ நோக்கத்துடனும்‌ அமைதியைக்‌ குலைக்கும்‌ நோக்கத்துடனும்‌ அவமரியாதையுடன்‌ நடந்துகொண்டதாக தன்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு அந்த அபராதம்‌ விதிக்கப்பட்டது. மாஜிஸ்திரேட்‌ நீதிமன்றத்தில்‌ தன்னுடைய குற்றத்தை ஒப்புக்‌ கொண்ட ஷாலினிக்கு மாஜிஸ்திரேட்‌ எம்‌எஸ்‌ அருண்ஜோதி அந்த அபராத்தை விதித்தார்‌. முதியோர்‌ காப்பகத்தில்‌ வேலை செய்து வந்தவரான ஷாலினி, கடந்த ஜூலை முதல்‌ தேதியன்று அதிகாலை 4 மணிக்கு “அல்‌ஃபாகுயின்ஷா''எனும்‌ தன்னுடைய டிக்‌ டாக்‌ கணக்கின்கீழ்‌ அவமரியாதையான வாசகங்களை வெளியிட்டதாகத்‌ தெரிவிக்கப்பட்டது.

அதிகபட்சம்‌ 100 வெள்ளி அபராதம்‌ விதிக்க வகை செய்யும்‌ 1955ஆம்‌ ஆண்டு சிறுகுற்றங்கள்‌ சட்டத்தின்‌ 14வது பிரிவின்கீழ்‌ அப்பெண்மீது குற்றம்‌ சுமத்தப்பட்டிருந்தது.

 ஈஷா என்று பரவலாக அறியப்படுபவரான ராஜேஸ்வரி (வயது 29) இம்மாதம்‌ ஜூலை 5ஆம்‌ தேதி கோலாலம்பூர்‌, ஸ்தாப்பாக்கில்‌ உள்ள தம்முடைய வீட்டில்‌ இறந்து கிடந்தார்‌. டிக்‌ டாக்‌ வாயிலாக தம்மை இரண்டு நபர்கள்‌ தொல்லைசெய்து வருவதாக முதல்‌ நாளன்று (ஜூலை 4) போலீசில்‌ அவர்‌ புகார்‌ செய்திருந்தார்‌. இதனிடையே, ஆர்‌. புஷ்பா என்பரை தமது டிக்‌ டாக்‌ வாயிலாக அவமரியாதை செய்ததாகவும்‌ சசிகுமார்‌ மீது குற்றம்‌ சுமத்தப்பட்டது. அக்குற்றச்சாட்டை அவர்‌ மறுத்தார்‌. பதினெட்டாயிரம்‌ வெள்ளி பிணையுறுதியில்‌ அவர்‌ விடுவிக்கப்பட்டுள்ளார்‌

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *