பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து எடப்பாடி பழனிச்சாமி!
- Muthu Kumar
- 11 Nov, 2024
திருச்சி விமான நிலையத்தில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி உருவாகுமா?என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்த ஒத்த கருத்துள்ள அனைவரும் அதிமுக கூட்டணியில் இணையலாம். தேர்தல் நேரத்தில் அரசியல் சூழலுக்கு ஏற்றபடி எந்தக் கட்சி தலைமையிலான கூட்டணியில் யார் வருவார் என்பது தெரியவரும்.
தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை. மற்ற திட்டங்களுக்கு நிதி இல்லை என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். முட்டுகாட்டில் கலைஞர் பெயரில் பன்னாட்டு அரங்கம் அமைக்க மட்டும் நிதி எங்கிருந்து வந்தது? என எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார்.2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்காமல் தனித்தனியே போட்டியிட்டன.
விரைவில் பாஜகவில் ஒன்றிய அளவில் நிர்வாக ரீதியாக மாற்றங்கள் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு சொல்லியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
தற்போது நான்காகப் பிரிந்திருக்கும் அதிமுகவை ஒருங்கிணைத்து அதனோடு கூட்டணி அமைத்து தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதுதான் பாஜகவின் திட்டம்.அதற்கு இணங்காதவர்களை மிரட்டிப் பணிய வைப்பது அதன் செயல்திட்டம்.அண்மையில் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் உற்றதுணையான முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் ஆகியோரிடம் ஒன்றிய அரசுடைய விசாரணை அமைப்புகள் சோதனை நடத்தின.அதன்மூலம் அவ்விருவரையும் மிரட்டி ஒன்றிணைய வற்புறுத்தியதாகச் சொல்லப்பட்டது.
இந்நிலையில்தான், இதுவரை பாஜகவுடன் கூட்டணி இல்லை இல்லவே இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்த எடப்பாடி பழனிச்சாமி, இப்போது திமுக ஆட்சியை வீழ்த்த ஒத்த கருத்துள்ள கட்சிகளுட்ன் கூட்டணி சேரலாம் என்று சொல்லியிருக்கிறார்.
அதேநேரத்தில், அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்குக் காரணம் என்று சொல்லப்பட்ட அண்ணாமலைக்கு ஒன்றிய அளவில் ஒரு பொறுப்பைக் கொடுத்துவிட்டு தமிழ்நாடு பாஜகவுக்கு புதிய தலைவரை அக்கட்சி அறிவிக்கும் என்று சொல்லப்படுகிறது.
இதன்மூலம்,வெகு விரைவில் அதிமுக ஒன்றிணையவிருக்கிறது என்பதும் அதன்பின் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் அறிவிப்பு வெளியாகும் என்பதும் புலனாகிறது என்று அரசியல்நோக்கர்கள் கூறுகிறார்கள்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *