சிலம்பக் கலையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்! - ஓம்ஸ் பா.தியாகராஜன் வேண்டுகோள்
- Muthu Kumar
- 06 Oct, 2024
ஷாஆலம், அக்.6-
கடந்த 29.9.2024 காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை செக்ஷன் 19 ஷாஆலம் மண்டபத்தில் சிலாங்கூர் சிலம்பக் கோர்வைக் கழக ஏற்பாட்டில்13 ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில அளவிலான சிலம்பக் கோர்வை போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இப்போட்டியில் 276 மாணவர்கள் கலந்து கொண்டனர். ஐந்து மாவட்டங்கள் (சிப்பாங், ஹுலு லாங்காட், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங் ஜெயா) மற்றும் பத்து தமிழ்ப்பள்ளிகள் (சிப்பாங் தமிழ்ப்பள்ளி, செர்டாங் தமிழ்ப்பள்ளி, நோர்த் ஹம்மோக் தமிழ்ப்பள்ளி, லாடாங் எமரால்டு தமிழ்ப்பள்ளி, ரிஞ்சிங் தமிழ்ப்பள்ளி, பத்துமலை தமிழ் பள்ளி, செமினி தமிழ்ப்பள்ளி, காஜாங் தமிழ்ப்பள்ளி, பூச்சோங் தமிழ்ப்பள்ளி, பெஸ் செர்டாங் தமிழ்ப்பள்ளி) என மொத்தம் 15 குழுக்களாகப் பங்கெடுத்தனர்.
இப்போட்டிக்குச் சிறப்பு வருகையாளராக ஓம்ஸ் அறவாரியத் தலைவர் சமூக சேவகர் ஒம்ஸ் பா.தியாகராஜன், மலேசிய சிலம்பக் கோர்வை கழகத் தோற்றுநர் கலைமாமணி டாக்டர் கு.அன்பழகன், கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், சிலாங்கூர் மாநில விளையாட்டுத் துறை பிரிவு அதிகாரி பிரவீன் முரளி போட்டியில் சிறப்பு பிரமுகர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஓம்ஸ் தியாகராஜன் சிறப்புரையாற்றுகையில் 'சிலம்பக் கலை நமது பாரம்பரியக் கலைகளில் ஒன்றாகும். இக்கலையை எப்பாடுபட்டாவது அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அவ்வகையில் சிலம்பக் கோர்வை கழகம் மிகச் சிறப்பாக இந்தப் பணியைச் செய்து கொண்டிருக்கின்றது. இச்சிலம்பக் கோர்வை கழகம் மேன்மேலும் உயர தன்னால் முடிந்த அளவிற்கு உதவி புரிவேன் என்று அவர் உரையாற்றினார்.
சிலம்பக்கலை நம் மக்களிடையே நாளுக்கு நாள் அதிகளவில் ஈர்க்கப்பட்டு வருவதை நம்மால் உணர முடிகின்றது. பெற்றோர்கள் அனைவரும் பிள்ளைகளின் விளையாட்டைக் கண்டு மகிழ்ச்சியுற்றனர். இப்போட்டி சிறப்பாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்த கலை நுட்பக் குழுத் தலைவர் அன்பரசன், போட்டி ஏற்பாட்டுக் குழுத்தலைவர் மாஸ்டர் நித்தியானந்தன், அவர்தம் குழுவினருக்கும் மிகுந்த பாராட்டுகள் என்று ஓம்ஸ் தியாகராஜன் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *