பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்க்கு வரவேற்பு!

- Muthu Kumar
- 22 Mar, 2025
(ஆர்.ரமணி)
பினாங்கு, மார்ச் 22-
பினாங்கு பாயான் லெப்பாஸ் வட்டாரத்திலுள்ள ஜாலான் மஹ்காமா ரமலான் சந்தையில் ஒரே நாளில் குறுகிய நேரத்தில் பயன்படுத்தப்பட்ட சுமார், 371 கிலோ எடை கொண்ட சமையல் எண்ணெய் சேகரிக்கப்பட்டது தொடர்பில், பொது மக்கள் மத்தியில் இதன் மீதான் ஆர்வம் மிகுந்து வருவதைக் காட்டுவதாக, பினாங்கு மாநகர் மன்றத் தலைவர் டத்தோ அ.ராஜேந்திரன், இப்பகுதி சுற்று வட்டாரப் பொதுமக்களுக்கு நன்றி பாராட்டினார்.
பெட்ரோனாஸ் எரிவாயு நிறுவனத்துடன் இணைந்து, பினாங்கு மாநகர் மன்றம் கூட்டுறவு ரீதியாக இப்பணி தொடர்பில் அண்மையில் இங்கு ஈடுபட்டிருந்தபோது, சுமார் 3 மணி நேரத்திற்குள் 371 கிலோ பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் இங்குள்ள மக்களிடமிருந்து பெறப்பட்டது. இத்தகைய எண்ணெய் ஒரு கிலோவுக்கு 3 ரிங்கிட் என்ற அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் மக்கள் பெருமளவில் கூடுகின்ற ரமலான் சந்தையாக இது புகழ் பெற்று விளங்குவதால், மாநகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் இதன் பற்பல துறைகளின் தலைவர்கள் ஆகியோருடன் இணைந்து, அன்றைய தினம் ராஜேந்திரன் இச்சந்தையைச் சுற்றி வலம் வந்து, இங்குள்ள வணிகர்களை நேரில் சந்தித்து அளவளாவி அவர்கள் எதிர்நோக்குகின்ற குறைகளைக் கேட்டறிந்தார்.
வணிகர்களுடனான இச்சந்திப்பின் போது, பெட்ரோனாஸ் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான தலைவர் ஹர்லினா பிக்ரி, அதன் தலைமை நிர்வாகி நட்ஜிமி யூசோப், உள்ளிட்ட பிரமுகர்களும் அவருடன் வருகையளித்திருந்தனர்.
மாநிலத்தில் மாநகர் மன்றத்தின் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் சேகரிப்புத் திட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இங்கிருக்கும் செசில் ஸ்திரிட் சந்தையில் தொடங்கப்பட்ட நாளிலிருந்து, இதரப் பல சந்தைகளிலிருந்தும் ஏறத்தாழ 20 ஆயிரம் கிலோவுக்கும் கூடுதலான அளவு இதுவரையில் சேகரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை அதன் மறுசுழற்சி மையங்களில் சேர்ப்பிக்கும் ஆர்வம் பொது மக்களிடையே அதிகரித்திருக்கும் நிலவரம், அதன் மூலம் கிட்டுகின்ற சிறிதளவு உபரி வருமானமே மூல காரணமாக விளங்குகின்ற நிலையில், இத்திட்டம் வரும் மார்ச் திங்கள் 22ஆம் நாளிலும் இதே பகுதியில் செயல்படுத்தப்படவிருப்பதை கருத்தில் கொண்டு, பொது மக்கள் இங்கு வருகையளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Majlis Bandaraya Pulau Pinang mengumpul 371kg minyak masak terpakai dalam tiga jam di Pasar Ramadan Jalan Mahkamah. Program ini, dengan kerjasama Petronas, menawarkan RM3/kg. Sejak Ogos lalu, lebih 20,000kg dikumpul, menarik minat awam kerana pendapatan tambahan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *