பிரதமரின் எச்சரிக்கையை பொருட்படுத்த மாட்டோம்-பாஸ் இளைஞர் பகுதி அறிவிப்பு

- Muthu Kumar
- 25 Mar, 2025
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 25-
நகர்ப்புற புதுப்பித்தல் சட்டத்தை (யூஆர்ஏ) அமல்படுத்த அரசாங்கம் முயன்று வருவதை பல தரப்பினர் எதிர்த்து வருகின்றனர். அத்தரப்பினரை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்.
அவரின் எச்சரிக்கையைத் தாங்கள் பொருட்படுத்தப் போவதில்லை என்று பாஸ் இளைஞர் பகுதி நேற்று கூறிக்கொண்டது.
ஜூன் மாதத்தில் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் அந்த உத்தேச மசோதாவை எதிர்த்து பாஸ் இளைஞர் பகுதியினர் வீதிகளில் இறங்கி போராடுவோம் என்று இளைஞர் பகுதியின் தலைவர் அஃப்னான் ஹமிமி தாயிப் அஸாமுடின் தெரிவித்தார்.
அன்வாரின் எச்சரிக்கையைக் கண்டு நாங்கள் பயப்படப் போவதில்லை. நாங்கள் எந்த குற்றத்தையும் செய்யவில்லை. எங்களின் மனக்குறைகள் செவிமடுக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கமாகும் என்று எஃப்எம்டி இணையப் பத்திரிகையிடம் அவர் கூறினார்.
சட்டத்திற்கு உட்பட்டுத்தான் பேரணியை ஏற்பாடு செய்வோம். கடந்த காலத்தில் நாகரிகமற்ற சில நபர்கள் செய்தது போன்று போலீஸ் வாகனங்களை நாங்கள் அடித்துச் சேதப்படுத்த மாட்டோம் என்று அஃப்பான் குறிப்பிட்டார்.பேரணிக்கான நாள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. ஆனால், நோன்புப்
பெருநாளுக்குப் பிறகு அப்பேரணி நடத்தப்படும் என்றார் அவர்.
உத்தேச சட்டம் வாயிலாக நகர்புற மலாய்க்காரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு இடையூறு செய்ய நினைக்க வேண்டாமென்று இம்மாத முற்பகுதியில் எதிர்க்கட்சியினருக்கு அன்வார் கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.
பெரும்பாலும் ஏழைகளாக உள்ள மலாய்க்காரர்களுக்கு மட்டுமல்லாது ஏழ்மையில் சிக்கியுள்ள இந்தியர்கள், சீனர்கள் ஆகியோரின் நலனுக்காகவும் நாங்கள் போராடுகிறோம். இதனை எதிர்க்க வேண்டாமென்று நான் எச்சரிக்கிறேன் என்று அன்வார் கூறியிருந்தார்.
யூஆர்ஏ சட்டத்தைத் தற்காக்க மிகப் பெரிய பேரணியை நடத்த அரசாங்கத்தால் முடியும் என்றும் அவர் அறைகூவல் விடுத்தார்.
அந்த உத்தேச சட்டம் நடப்புக்கு வந்தால், நகர்புறங்களில் உள்ள ஏழை மலாய்க்காரர்கள் அங்கிருந்து இடம்பெயரும் ஆபத்து ஏற்படும் என்று எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அச்சட்டம் நவீனக் காலனித்துவம் என்றும் பாலஸ்தீன மக்களின் இடப்பெயர்வுக்கு ஒப்பானது என்றும் பாஸ் கட்சியின் இளைஞர் பகுதித் துணைத் தலைவர் ஹபீஸ் சப்ரி உட்பட பலர் சாடியுள்ளனர்.
Perdana Menteri Anwar Ibrahim memberi amaran terhadap pihak yang menentang Akta Pembaharuan Bandar (URA). Pemuda PAS berikrar untuk membantah secara aman selepas Aidilfitri. Pembangkang mendakwa URA boleh menyebabkan pemindahan penduduk miskin bandar, sementara kerajaan menegaskan ia meningkatkan taraf hidup semua kaum.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *