சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தொடங்குவதில் தாமதம்!
- Muthu Kumar
- 31 Aug, 2024
சென்னையில் இன்று நடைபெறவுள்ள ஃபார்முலா 4 கார் பந்தயம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.மாலை 5 மணிக்கு முறையான அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
பிரபலமான ஃ பார்முலா4 வகை கார்பந்தயம் இந்தியாவில் 5 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் முதல் சுற்று சென்னையின் புறநகர் பகுதியான இருங்காட்டுகோட்டையில் 3 பந்தயங்களாக கடந்த வாரம் நடந்து முடிந்துவிட்டது. இதன் 2-வது சுற்று போட்டி சென்னையில் தீவுத்திடலை ஒட்டி உள்ள முக்கியமான சாலைகளில் நடத்தப்படுகிறது. தீவு திடல், போர் நினைவு சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை வரை 3.5 கிலோமீட்டர் போட்டிக்குரிய தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இரண்டு நாளாக நடைபெறும் இந்த போட்டி இன்று தொடங்க உள்ள நிலையில், கார் பந்தயங்களுக்கு அனுமதி வழங்கும் சர்வதேச அமைப்பான எப்.ஐ.ஏ. சான்றிதழை பந்தயம் நடத்தப்படும் தினத்தில் 12 மணிக்குள் பெற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில் ஃபார்முலா 4 கார் பந்த்யத்துக்கான எப்.ஐ.ஏ. சான்று பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று காலை முறையிடப்பட்டிருந்தது.
சென்னை தீவுத்திடலைச் சுற்றி ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை விதிக்க கோரி பாஜக செய்தித்தொடர்பாளர் பிரசாத் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் தலைமையிலான அமர்வானது பந்தயத்துக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. எனினும் கார் பந்தயங்களுக்கு அனுமதி வழங்கும் சர்வதேச அமைப்பான எப்.ஐ.ஏ. சான்றிதழை பந்தயம் நடத்தப்படும் தினத்தில் 12 மணிக்குள் பெற வேண்டும் எனவும், அதன் நகலை மனுதாரருக்கும் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் எப்.ஐ.ஏ. சான்று பெறுவதற்கான காலஅவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருக்கிறது. மழை காரணமாக பந்தயச் சாலையை ஆய்வு செய்து சான்று பெறுவதற்கான கால அவகாசத்தை 4 மணி நேரம் நீட்டித்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இதுசம்பந்தமான விசாரணைக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஒப்புதலுக்காக அரசுத் தரப்பினர் காத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் பொதுவாக ஃபார்முலா 4 - எப்ஐஏ அனுமதி வாங்க வேண்டும் என்பதே ஏற்பாட்டாளர்களுக்கு வழக்கு போடும்வரை தெரியாதா என்று சமூக வலைதளங்களில் பாஜகவினர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இதனிடையே சென்னையில் இன்று நடைபெறவுள்ள ஃபார்முலா 4 கார் பந்தயம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், மாலை 5 மணிக்கு முறையான அறிவிப்பு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *