செல்லும் இடமெல்லாம் காங்கிரஸுக்கு ஆதரவு! - மும்பையில் திருமா
- Muthu Kumar
- 15 Nov, 2024
மகாராஷ்டிராவில் அடுத்த வாரம் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்குப் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.இதற்கிடையே அங்குப் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக விசிக தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் செய்தார். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் மகாராஷ்டிர மக்கள் தெளிவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மகாராஷ்டிராவில் இப்போது ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருக்கும் நிலையில், அங்கு பாஜக- ஷிண்டே சிவசேனா- அஜித் பவார் என்சிபி கட்சிகள் ஆட்சியில் உள்ளன.அவர்களுக்கு எதிராகக் காங்கிரஸ்- தாக்ரே சிவசேனா- சரத் பவார் என்சிபி கட்சிகள் களத்தில் உள்ளன. இரு தரப்பிற்கும் இடையே இந்த முறை கடும் போட்டி நிலவுகிறது.
மகாராஷ்டிராவில் அடுத்த வாரம் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். மகாராஷ்டிரா தலைநகர் மும்பை கணிசமான அளவு தமிழர்கள் வசிக்கும் பகுதியாகும். குறிப்பாக தாராவி உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்கள் அதிகளவில் வசிக்கிறார்கள். இதன் காரணமாக விசிக தலைவர் திருமாவளவன் அங்குக் காங்கிரஸ் சார்பில் பிரச்சாரம் செய்தார்.
இன்று மும்பையில் பல இடங்களில் திருமாவளவன் நேரில் சென்று பிரச்சாரம் செய்தார். இதற்கிடையே பிரபல டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த திருமாவளவன், மகாராஷ்டிர மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதைப் பார்க்க முடிவதாகவும் தேர்தலில் நிச்சயம் காங்கிரஸ் கூட்டணி மிகப் பெரியளவில் வெல்லும் என்றும் அவர் குறிப்பிட்டார்.இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "மும்பை பகுதியில் தாராவி உள்ளிட்ட தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் தாக்ரே சிவசேனா வேட்பாளர்களுக்கு ஆதரவாகத் தமிழ் மக்களிடையே வாக்குகளைச் சேகரித்தோம். செல்லுமிடமெல்லாம் காங்கிரஸ் கூட்டணிக்கு மிகப் பெரிய ஆதரவு இருப்பதைப் பார்க்க முடிகிறது. மராட்டிய மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறார்கள்.
நிச்சயம் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியே இங்கு ஆட்சியை அமைக்கும் என நம்புகிறேன். தமிழர்கள் வசிக்கும் பகுதியில் போட்டியிடும் காங்கிரஸ், தாக்ரே சிவசேனா வேட்பாளர்கள் நிச்சயம் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெல்வார்கள். மகாராஷ்டிரா தேர்தல் என்பது தேசியளவில் உற்று நோக்கப்படும் தேர்தலாக இருக்கிறது. இது மாநில தேர்தல் என்ற அளவில் மட்டுமில்லாமல் இந்தியா கூட்டணிக்கும் பாஜகவின் சதி அரசியலுக்கும் இடையே நடக்கும் யுத்தமாகவே இருக்கிறது" என்றார்.
மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சீட்கள் உள்ள நிலையில், அவை அனைத்திற்கும் வரும் நவ. 20ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவும் அதைத் தொடர்ந்து நவ. 23ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு 288 இடங்கள் உள்ள நிலையில், 145 இடங்களில் வெல்லும் கூட்டணி அல்லது கட்சியே ஆட்சியைப் பிடிக்கும்.
கடந்த 2019ம் ஆண்டு எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.அதிகபட்சமாக பாஜக 105 சீட்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பாஜக கூட்டணியில் அப்போது போட்டியிட்ட ஒருங்கிணைந்த சிவசேனா 56 இடங்களில் வென்று இருந்தது. அதேபோல ஒருங்கிணைந்த என்சிபி 54 சீட்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *