பேரரசர் மற்றும் பிரதமருக்கு மிரட்டல்! 8 பேர் கைது! ஐ.எஸ். அமைப்பின் சதியா?

top-news
FREE WEBSITE AD

புத்ரா ஜெயா, ஜூன்‌ 25:இஸ்லாமிக்‌ ஸ்டேட்‌ (ஐ.எஸ்‌) எனப்படும்‌ பயங்கரவாத அமைப்புடன்‌ தொடர்பு வைத்திருப்பவர்கள்‌ எனச்‌ சந்தேகிக்கப்படும்‌ ஆறு       ஆடவர்களையும்‌ இரண்டு பெண்களையும்‌ போலீசார்‌  கைது செய்துள்ளனர்‌.   

பணிஓய்வுபெற்ற விரிவுரையாளர்‌ உட்பட அந்த எட்டு சந்தேகப்‌ பேர்வழிகளும்‌ ஸ்பெஷல்‌ பிராஞ்ச்‌ 8 (பயங்கரவாத ஒழிப்பு) போலீஸ்காரர்களால்‌ கடந்த வார இறுதியில்‌ கைது செய்யப்பட்டனர்‌. ஜொகூர்‌. கிளந்தான்‌, பினாங்கு, சிலாங்கூர்‌ ஆகிய மாநிலங்களில்‌ மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில்‌ அவர்கள்‌ கைது செய்யப்பட்டனர்‌ என்று உள்துறை அமைச்சர்‌ டத்தோஸ்ரீ  சைஃபுடின்‌ நசுத்தியோன்‌  இஸ்மாயில்‌ தெரிவித்தார்‌.

மாட்சிமை தங்கிய மலேசியப்‌ பேரரசர்‌ சுல்தான்‌ இப்ராஹிம்‌, பிரதமர்‌ டத்தோஸ்ரீ அன்வார்‌ இப்ராஹிம்‌, போலீஸ்படையின்‌ உயர்‌ அதிகாரிகள்‌, இதர பிரமுகர்கள்‌ ஆகியோர்‌ தாக்கப்படும்‌ சாத்தியம்‌ இருப்பது தங்களின்‌ புலன்விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது என்று அவர்‌ கூறினார்.

கைது செய்யப்பட்டவர்கள்‌ 25 வயதுக்கும்‌ 7௦ வயதுக்கும்‌ இடைப்பட்டவர்கள்‌ ஆவர்‌. அவர்கள்‌ அனைவரும்‌ சொஸ்மா சட்டத்தின் கீழ்‌ தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்‌ என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள்‌ சந்திப்பில்‌ சைஃபுடின்‌ கூறினார்‌.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகப்‌ பேர்வழிகள்‌ வெவ்வேறு பின்புலங்களையும்,‌ பொருளாதார அந்தஸ்துகளையும்‌ கொண்டவர்கள்‌. குடும்பமாது, கட்டுமானத்‌ தொழிலாளி, முன்னாள்‌ பல்கலைக்கழக விரிவுரையாளர்‌ ஆகியோரும்‌ அவர்களுள்‌ அடங்குவார்கள்‌.

மலேசியத்‌ தலைமைத்துவம்‌ இஸ்லாமிய பேரரசு ஆட்சிமுறையைக் கடைப்பிடித்து, அது நடக்கவில்லை எனும்‌ காரணத்தினால்‌ தீவிரவாதிகளாக அவர்கள்‌ மனமாற்றம்‌ செய்யப்பட்டுள்ளனர்‌ என்பதைப் பூர்வாங்க. விசாரணைகள்‌ காட்டுகின்றன.

இதன்‌ காரணமாக, தேசிய நிலையிலான முக்கியப்‌ புள்ளிகளுக்குக் குறிவைக்கும்‌  சதித்திட்டத்தில்‌ ஈடுபட அவர்கள்‌ முன்வந்தனர்‌ என்றும்‌ அந்த விசாரணையில்‌ தெரிய வந்தது.

நேற்றைய செய்தியாளர்‌ சந்திப்பில்‌ தேசியப்‌ போலீஸ்படைத்‌ தலைவர்‌ டான்ஸ்ரீ ரஸாருடின்‌ உசேன்‌, ஸ்பெஷல்‌ பிராஞ்ச்‌ பிரிவின்‌ துணைத்‌ தலைமை இயக்குநர்‌ டத்தோ அப்துல்‌ அஸிஸ்‌ அப்துல்‌ மஜிட்‌ ஆகியோரும்‌. கலந்துகொண்டனர்‌.

கைதுசெய்யப்பட்டுள்ள அந்த எட்டு சந்தேகப்‌ பேர்வழிகளுக்கும்‌ என்ன தொடர்பு என்பதைக்‌ கண்டுபிடிக்க மேல்விசாரணை நடத்தப்படும்‌ என்றும்‌ சைஃபுடின்‌ விவரித்தார்‌.

அண்மையில்‌ உலுதிராம்‌ போலீஸ்‌ நிலையம்‌ மீது நடத்தப்பட்ட தாக்குதலில்‌ அந்த எண்மருக்கும்‌ தொடர்புள்ளதா என்று கேட்கப்பட்டதற்கு, புலன்விசாரணை இன்னும்‌ தொடர்ந்து கொண்டிருப்பதாகத்‌ தெரிவித்தார்‌.

இந்த விவகாரத்தை ஸ்பெஷல்‌ பிராஞ்ச்‌ இன்னும்‌ விசாரித்துக்‌ கொண்டிருக்கிறது. இப்போதைக்கு வேறு எந்த சம்பவத்துடனும்‌ இந்தக் கைது நடவடிக்கையுடன்‌ தொடர்புபடுத்திப் பார்க்க நாங்கள்‌ விரும்பவில்லை.  

ஜொகூரின்‌ உலுதிராம்‌ போலீஸ்‌ நிலையம்‌ மீது கடந்த  மே மாதம்‌ 17 ஆம்‌ தேதி முகமூடி அணிந்திருந்த ஆடவன்‌ ‌ நடத்திய தாக்குதலில்‌ இரண்டு போலீஸ்காரர்கள்‌ கொல்லப்பட்டனர்‌. மற்றொரு போலீஸ்காரர்‌ படுகாயமுற்றார்‌. அச்சம்பவத்தைத்‌ தொடர்ந்து, தாக்குதல்காரனின்‌ பெற்றோர்‌, சகோதரன்‌, இரண்டு சகோதரிகள்‌ ஆகியோர்‌ மீது நீதிமன்றத்தில்‌ குற்றம்‌ சுமத்தப்பட்டது. ஐஎஸ்‌ பயங்கரவாதத்துடன்‌தொடர்பு வைத்திருந்ததாக அவர்கள்‌ மீது குற்றம்‌ சுமத்தப்பட்டது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *