உரிமம் இன்றி சட்ட விரோதமாக வியாபாரம் செய்த அந்நிய நாட்டவருக்கு அபராதம்!

- Muthu Kumar
- 27 Mar, 2025
(எஸ்.எஸ்.மணிமாறன்)
செகிஞ்சான், மார்ச் 27-
இங்கு, செ கிஞ்சான் சிற்றூரில் வியாபார உரிமம் இன்றி சட்ட விரோதமாக மளிகைக் கடை நடத்தி வந்த அந்நிய நாட்டவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு அபராதக் கடிதமும் வழங்கப்பட்டது. சபாக் பெர்ணம் மாவட்ட மன்றத்தின் அமலாக்கப் பிரிவினர், சுற்றுச் சூழல் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட சுகாதார இலாகா அதிகாரிகள் என 10 க்கும் மேற்பட்டோர் களத்தில் இறங்கி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டதில் செகிஞ்சான் கடை வீதியில் எந்த வித அனுமதியும் பெறாமல் கடை வியாபாரம் நடத்தி வந்த அந்நிய நாட்டவரின் செயல் அம்பலமானது.
நேற்று காலையில், இவ்வட்டாரத்தில் செயல்படும் கடைகளில் திடீர் பரிசோதனையில் ஈடுபட்ட போது சட்ட விரோதமாக மளிகைக் கடை வியாபாரம் நடத்தி வந்த அந்நிய நாட்டவரின் பித்தலாட்டம் வெளிச்சத்துக்கு வந்ததாக இந்த நடவடிக்கைக்குப் பொறுப்பேற்ற அமலாக்கப் பிரிவின் உயர் அதிகாரி ரஷிட் ரஹிம் தெரிவித்தார்.
2007 ஆம் ஆண்டின் சபாக் பெர்ணம் மாவட்ட மன்றத்தின் வியாபாரப் பிரிவு யுயுகே 9 இன் கீழ் சட்ட விரோதமாக கடை வியாபாரம் நடத்திய அந்நிய நாட்டவரின் செயல் குற்றமெனக் கருதப்படுவதால் அவர் விரைவில் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்படுவார் என்று அவர் கூறினார்.
அதே வேளையில், வியாபார உரிமம் இல்லாத அந்நிய நாட்டவருக்கு வியாபாரம் செய்ய கடையை வழங்கிய அதன் உரிமையாளரும் இந்தச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று ரஷிட் ரஹிம் தெரிவித்தார். விசாரணையின் போது குற்றம் நிரூபணமானால் அந்நிய நாட்டவருக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம், சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப் படலாம் என்றும் அவர் கூறினார்.
அதே வேளையில் கடையை வாடகைக்கு விட்ட உள்ளூர் பிரஜைக்கும் உரிய அபராதம் விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும், மளிகைக் கடையில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் இந்த விசாரணைக்குப் பின்னரே ஒப்படைக்கப்படும் என்று ரஷிட் ரஹிம் கூறினார்.
Seorang warga asing di Sekinchan didapati menjalankan perniagaan runcit secara haram tanpa lesen dan dikenakan denda serta amaran. Pemilik premis juga disiasat. Jika disabit kesalahan, mereka boleh didenda RM2,000 atau dipenjara. Barangan dirampas menunggu siasatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *