ரினி தமிழ்ப்பள்ளியின் 53ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி!
- Muthu Kumar
- 11 Oct, 2024
ஸ்கூடாய், அக்.11-
ரினி தமிழ்ப்பள்ளியின் 53ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் அஸ்மான் ஹாஷிம் விளையாட்டு அரங்கில் மிகச் சிறப்பாக நடந்தேறியது. அன்றைய நிகழ்வில் மாணவர்கள் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்றனர். மழையையும் பொருட்படுத்தாது மாணவர்கள் விளையாட்டில் முத்திரை பதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நிகழ்விற்கு வருகையளித்தது பாராட்டுக்குரியதாக அமைந்தது என பள்ளியின் தலைமையாசிரியர் சு.தமிழ்ச்செல்வி தமதுரையில் குறிப்பிட்டார்.
ரினி தமிழ்ப்பள்ளியின் விளையாட்டுப் போட்டி நிகழ்வின் சிறப்புப் பிரமுகராக வருகை புரிந்த ஸ்கூடாய் சட்டமன்ற உறுப்பினர் மரினா இப்ராஹிம் பள்ளியின் திடலைச் சீரமைப்பதில் தான் கவனம் செலுத்தவுள்ளதாகக் கூறினார். மேலும், நிகழ்வு சிறப்பாக நடந்தேறிட தமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
மாணவர்களின் கண்கவர் அணிவகுப்போடு தொடங்கிய நிகழ்வினை மரினா இப்ராஹிம் தீபச்சுடர் ஏற்றி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். தொடர்ந்து பள்ளியின் இளஞ்சிட்டுகள் ஜிம்ராமா நடனத்தை வழங்கி நிகழ்விற்கு மெருகூட்டிய வேளையில் சிலம்பக் குழுவினர் தங்களின் படைப்பினையும் வழங்கி பாராட்டுகளைப் பெற்றனர்.ஒன்றாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரையிலான மாணவர்களுக்கு ஆண், பெண் என இரு பிரிவுகளில் ஓட்டப்போட்டிகள் நடைபெற்றன. 100 மீட்டர், 200 மீட்டர், 4X 100 மீட்டர், 4X 200மீட்டர் போட்டிகளில் மாணவர்கள் சளைக்காது ஓடி தங்கள் விளையாட்டு இல்லங்களுக்கு மதிப்பெண்களைக் குவித்தனர்.
மேலும், முதன் முறையாக நடைபெற்ற ஈட்டி எறிதல் மற்றும் குண்டு வீசுதல் போட்டிகளிலும் மாணவர்கள் தங்களின் திறமைகளைக் காட்டி சிறப்பாக விளையாடினர்.விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில் கலந்து கொண்ட மலேசியாவின் தங்க மகன் விருது பெற்ற டத்தோ டாக்டர் சந்திரன், மாணவர்களுக்கு வெற்றிக் கோப்பைகளை வழங்கி சிறப்பு செய்ததோடு ரிம 1000 தொகையை நன்கொடையாக வழங்குவதாக தமது நிறைவுரையில் கூறினார்.
பள்ளியின் 53ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டியின் வெற்றியாளராக மஞ்சள் இல்லம் மகுடம் சூடிக் கொண்ட வேளையில் இல்ல அணிவகுப்பிற்கான முதலிடத்தைப் பச்சை இல்லம் கைப்பற்றியது.
மேலும் பள்ளிச் சீருடை இயக்கத்தின் அணிவகுப்பிற்கான முதல்நிலையை செம்பிறைச் சங்க இயக்கத்தினர் பெற்றனர். இவ்வாண்டு பள்ளியின் விளையாட்டு வீரராக கார்த்திகேயனும் விளையாட்டு வீரங்கனையாகச் லஷ்மித்தாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இன்றைய நிகழ்வு மிகச் சிறப்புடன் நடைபெற தூணாய் நின்ற துணைத்தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத்தலைவர் பிரகாஷ் மற்றும் அவர்தம் செயலவையினர், பள்ளி மேம்பாட்டு வாரியக்குழு செயலவையினர் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் தலைமையாசிரியர் நன்றியுடன் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *