கொடைக்கானலில் மேஜிக் மஷ்ரூம் எனும் போதைவஸ்துக்கள் அமோக விற்பனை!
- Muthu Kumar
- 09 Nov, 2024
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், குளிர்ச்சியான சூழலை அனுபவிப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
அவர்கள் வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு சென்று பார்வையிடுகின்றனர். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். பல்வேறு பண்டிகை தினங்கள் மற்றும் வார விடுமுறை என தொடர் விடுமுறை நாட்களில் கொடைக்கானலுக்கு அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகை தருவதுண்டு.
தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் இங்கு நிலவும் குளிர், மிதமான வெப்பம், மழை உள்ளிட்ட காலநிலையை பெரும்பாலனோரை ரசிக்க வைக்கிறது, போதைப்பழக்கத்திற்குள்ளானவர்கள் கஞ்சா மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மட்டுமே விற்கப்படும் போதை காளான் (மேஜிக் மஷ்ரூம்) விற்பனையும் அதனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் தற்பொழுது அதிகரித்துள்ளது, சுற்றுலா வரும் வெளிமாநில இளைஞர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து இந்த போதை காளான் அதிகமாக விற்கப்பட்டு வருகிறது.
இதற்கு இன்னொரு பெயர் மேஜிக் மஷ்ரூம் (தாவிரவியல் பெயர் சைலோசைபி) என்றும் இதை உட்கொள்ளுபவர்களுக்கு நீண்ட நேர போதை ஏற்படுவதாக கூறி பெரும்பாலும் கொடைக்கானலுக்கு வரும் இளைஞர்கள் இந்த போதை காளான் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். கொடைக்கானல் கே.ஆர்.ஆர் கலையரங்கம், செட்டியார் பூங்கா, சின்ன பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் வெளிப்படையாக போதைகாளான் விற்பனை செய்வதால் வெளிமாநிலத்தோர்க்கு போதை காளான் விற்பனையும் படுஜோராக நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.
இந்த போதை பொருளின் பாதிப்புகள் தெரியாமல் இளைஞர்கள் பலர் போதைக்கு அடிமையாகி வாழ்க்கையை இழந்து விடுகின்றனர், போதைகாளான் போன்ற போதை பொருள்களினால் உடலில் பல்வேறு பாதிப்புகளும் ஏற்பட்டு பலரும் உயிரிழந்தாகவும் கூறப்படுகின்றது. கொடைக்கானல் சுற்றுலா தலங்கள் உட்பட அதனை சுற்றியுள்ள கிராமங்கள் என போதை பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் போதை பொருள் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது போன்ற போதைவஸ்துக்களை விற்பனை செய்வோரை கண்டறியவும், பொது இடங்களில் விற்பனையில் ஈடுபடுவோர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கையும் எழுந்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *