நேற்று வந்தவர்களைப் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம்- விஜய் பற்றி ஸ்டாலின்!

top-news
FREE WEBSITE AD

விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு நேற்று நடந்து முடிந்துள்ள நிலையில் மாநாட்டில் விஜய்யின் பேச்சு விவாதங்களைக் கிளப்பியுள்ளது.இந்நிலையில் நேற்று திமுக தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "நேற்று வந்தவர்களை பற்றி எல்லாம் கவலைப்படத் தேவையில்லை, நாம் "எப்போதும் வென்றான்" எனப் பெயர் பெற வேண்டும் எனப் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வரும் 2026ஆம் ஆண்டில் நடைபெற இருக்கிறது. சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள கடந்த சில மாதங்களாகவே திமுக தயாராகி வருகிறது. இதற்காக, தேர்தல் பணிகளை முன்னெடுக்கும் முகமாக, மூத்த நிர்வாகிகளை உள்ளடக்கிய தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவை தி.மு.க தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அமைத்தார். ஒருங்கிணைப்புக் குழுவினர் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் நியமிக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை முதல்வரும் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் கனிமொழி, பொன்முடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், முகவர்களுடன் தொடர்பில் இருந்து தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பது, அரசு சார்ந்த நலத்திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்வது, சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்துவது, சமூக வலைத்தளப் பதிவுகளை கண்காணிப்பது ஆகியவை குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

மேலும் இந்தக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், தொகுதி பார்வையாளார்களாக நியமிக்கப்பட்டு விட்டதால், தேர்தலில் சீட் கிடைக்காது கவலைப்பட வேண்டாம். உங்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.கட்சி பணிகளை செய்யுங்கள். தமிழக மக்களிடம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை நல்ல முறையில் சென்றடைந்துள்ளது. உங்கள் தொகுதியில், வேறு ஏதாவது பிரச்சனைகள் இருந்தாலும், உடனடியாக கட்சி தலைமைக்கு தெரியப்படுத்துங்கள் என்று அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், நேற்று வந்தவர்களைப் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம். இந்தப் பேரியக்கம் இதுபோன்ற பலரை இதற்கு முன்பும் பார்த்துள்ளது. திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது. எந்த கவலையும் இன்றி கட்சி உங்களுக்கு கொடுத்த பணிகளை சிறப்பாக செய்து முடியுங்கள். கூட்டணி, தொகுதி பங்கீடு என எதைப் பற்றியும் கவலைப்படாமல் பணியாற்றுங்கள், மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். தேர்தலுக்காக கடுமையாக பணியாற்ற வேண்டும். மகளிர் உரிமைத் தொகை திட்டம் மக்களிடம் நல்ல முறையில் சென்று சேர்ந்துள்ளது எனக் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பூத் முகவர்கள் தங்கள் பணிகளில் சிறப்பாக செயல்பட வேண்டும். புதுப்புது பாணிகளைக் கையில் எடுத்து தேர்தல் பணிகளை முடுக்கிவிட வேண்டும். வெற்றி பெற எப்போதும் உழைக்க வேண்டும், எப்போதும் செயல்பட வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தான் வெற்றிப் பெற போகிறோம். அதில் யாருக்கும் சந்தேகமும் இல்லை. திமுக அரசின் சாதனைகளை மக்களிடையே பரப்புரை செய்ய வேண்டும்.

கலைஞர் தனக்குப் பிடித்த ஊரின் பெயராக, தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் 'எப்போதும் வென்றான்' ஊரைச் சொல்வார். எப்போதும் வென்றானாக நாம் பெயர் பெற வேண்டும் என்றால், எப்போதும் உழைக்க வேண்டும்! எப்போதும் செயல்பட வேண்டும்! எப்போதும் பணியாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அதோடு, இந்தியாவில் எந்த ஆட்சியும் செய்யாத மகத்தான சாதனைகளை நாம் செய்து கொண்டிருக்கிறோம். சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகள் நம் இலக்கு, அதற்கான உழைப்பை நீங்கள் இன்றிலிருந்தே தொடங்க வேண்டும். அடுத்த ஓராண்டு காலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு தொகுதியை முழுமையாக தயார்படுத்த வேண்டும் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நேற்றைய முன்தினம் விக்கிரவாண்டி அருகே நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், திமுகவை விமர்சித்துப் பேசினார். திமுகவே தனது அரசியல் எதிரி எனப் பொருள்படும் வகையில் பேசியிருந்தார். இந்நிலையில் தான், ""நேற்று வந்தவர்களை பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம்" என ஸ்டாலின் பேசியுள்ளதாக தெரிகிறது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *