நாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்களாக இளம் மேசை பந்தாட்ட வீரர்கள்-அமைச்சர் டேனியல்!
- Muthu Kumar
- 27 Oct, 2024
(ஆர்.ரமணி)
பினாங்கு, அக். 27-
பினாங்கு மாநிலத்தில் மேசைப்பந்து விளையாட்டின் மீதான அபரிமித ஆர்வத்தினால், தீவிரப் பயிற்சிகளில் ஈடுபாடு கொண்டு தங்களை திறம்பட மேம்படுத்திக் கொண்டிருக்கும் இளம் விளையாட்டு வீரர்கள், எதிர்காலத்தில் மாநிலத்தை மட்டுமல்லாது நாட்டையும் பிரதிநிதித்து விளையாடக் கூடிய ஆற்றலுடன் பிரகாசமாக மிளிர முடியுமென்று, இங்கிருக்கும் ஆட்சிக்குழு உறுப்பினரான டேனியல் கூய் புகழாரம் சூட்டினார்.
தொடக்கத்தில் பிங் பாங் என்றழைக்கப்பட்டு, பின்னாளில் மேசைப்பந்தாட்டம் என ஏற்றுக் கொள்ளப்பட்ட இவ்விளையாட்டு நாளடைவில் உலகம் முழுவதும் வியாபித்து, எல்லா தரப்பினரும் விரும்பி விளையாடும் ஓர் உற்சாக விளையாட்டாக ஏற்றுக் கொள்ளப்பட்டு கடந்த 1988 ஆம் ஆண்டு உலகளாவிய சிறப்பினைக் கொண்ட ஒலிம்பிக் போட்டியிலும் சேர்த்துக் கொள்ளப்பட்டதன் மூலம் இதன் உன்னதச் சிறப்பினை உணர முடியுமென்று அவர் சுட்டிக் காட்டினார்.
வட்ட வடிவில் சிறிய கைப்பிடியைக் கொண்ட மட்டையைக் கொண்டு, அதன் மூலம் இலேசான தக்கை போல் கொண்ட சின்னஞ் சிறு பிளாஸ்டிக் பந்தை, ஒரு மேசையின் இருபுறமும் நின்றவாறு முன்னும் பின்னுமாய் அடித்து ஆடும் விதத்திலான இவ்விளையாட்டு, சிறுவர்கள் மத்தியில் சுறுசுறுப்பைத் தூண்டி அவர்களை உற்சாகத்தில் திளைக்க வைக்கும் தன்மையைக் கொண்ட சிறப்புமிக்கது என்று விவரித்த அவர், இது பள்ளி சிறார்கள் மத்தியில் புகழ் பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
அவ்வண்ணம் பினாங்கு மாநிலத்தின் மேசைப்பந்து சங்கம் வாயிலாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் வீரர்கள், தங்களின் திறமையை அபாரமாக வெளிக்காட்டுவதன் மூலம், போட்டிகளில் பங்கேற்று விளையாடுவதற்கான வாய்ப்புகளை இயல்பாகவே பெறுவது சாத்தியமென்பதால், இச்சங்கத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் விளையாட்டாளர்கள், சிறப்பான எதிர்காலத்துடன் வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களாக ஒளிர்வது திண்ணமென்று டேனியல் பாராட்டினார்.
விரைவில் லாபுவான் தீவில் நடைபெறவிருக்கும் மேசைப்பந்து விளையாட்டுப் போட்டிக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளும் உத்வேகத்துடன், மாநிலத்தின் இளம் வீரர்கள் சற்றும் சளைக்காத தீவிரப் பயிற்சிகளில் களமிறங்கி வருவது தொடர்பில் மகிழ்ச்சி தெரிவித்த அவர், இத்தகைய விளையாட்டாளர்களுக்கு உதவும் வகையில் மாநில அரசு சார்பில், தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கு தாம் சித்தமாய் இருப்பதாக, மாநிலத்தின் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சருமான டேனியல் மேலும் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *