யு.எஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி இன்று ஆரம்பம் ஜோகோவிச் சாதிப்பாரா?
- Muthu Kumar
- 26 Aug, 2024
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யு.எஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி இன்று முதல் செப். 8 வரை நடக்கிறது. ஆண்கள் ஒற்றையரில் 'நடப்பு சாம்பியன்' செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனெனில் சமீபத்தில் முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் ஒற்றையரில் முதன்முறையாக தங்கம் வென்றார்.
இம்முறை ஜோகோவிச் சாதித்தால், இத்தொடரில் அதிக முறை கோப்பை வென்ற வீரர்கள் (5முறை) வரிசையில் 2வது இடத்தை அமெரிக்காவின் பீட் சாம்ப்ராஸ், ஜிம்மி கானர்ஸ், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரருடன் பகிர்ந்து கொள்ளலாம். இது, இவரது 25வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமையும். இதன்மூலம் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற டென்னிஸ் நட்சத்திர வீரராகலாம். ஆஸ்திரேலிய வீராங்கனை மார்கரேட் கோர்ட், 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.
மேலும் ஏ.டி.பி., ஒற்றையரில் ஜோகோவிச் கைப்பற்றிய 100வது பட்டமாக அமையும். இதன்மூலம் ஏ.டி.பி., ஓபன் 'எரா'வில் இந்த மைல்கல்லை எட்டிய 3வது வீரராகலாம்.ஜோகோவிச்சுக்கு உலகின் 'நம்பர்-1' இத்தாலியின் ஜானிக் சின்னர், ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ரஷ்யாவின் மெத்வெடேவ் உள்ளிட்டோர் போட்டியாக அமையலாம்.
பெண்கள் ஒற்றையரில் 'நடப்பு சாம்பியன்' அமெரிக்காவின் கோகோ காப், உலகின் 'நம்பர்-1' போலந்தின் இகா ஸ்வியாடெக், பெலாரசின் அரினா சபலென்கா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினாவுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
இந்தியா சார்பில் ஒற்றையரில் சுமித் நாகல், இரட்டையரில் ரோகன் போபண்ணா பங்கேற்கின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *