திமுகவுக்காக 20 ஆண்டுகள் மு.க.ஸ்டாலின் உழைத்ததை மறுக்க முடியாது-எடப்பாடி பழனிசாமி!
- Muthu Kumar
- 04 Nov, 2024
திமுகவுக்காக 20 ஆண்டு காலம் மு.க.ஸ்டாலின் உழைத்ததை மறுக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி பாராட்டி உள்ளார்.
சேலம் மாவட்டம், இடைப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வீரப்பம்பாளையத்தில், அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசிய பொழுது, கருணாநிதி இருக்கும் போதே, 20 ஆண்டு காலம் திமுகவிற்காக மு.க.ஸ்டாலின் உழைத்தார்.
அதை இல்லை என்று நாங்கள் மறுக்கவில்லை. முதலில் எம்எல்ஏவாக இருந்தார். பின்னர் மேயராக பொறுப்பேற்றார். தொடர்ந்து அமைச்சர், துணை முதல்வர் பொறுப்புகளை வகித்தார். கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுக தலைவரானார். எதிர்க்கட்சியாக இருக்கும் போது, எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பு வகித்தார். பின்னர் முதல்வரானார். அதிமுக மூன்றாக போய்விட்டது என்று கூறுகின்றனர். எங்கள் தரப்பில் உள்ளது மட்டுமே அதிமுக. இதை நாங்கள் தொடர்ந்து நிரூபித்து காட்டிக்கொண்டிருக்கிறோம்.
2019ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலை விட, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், 1சதவீதம் ஓட்டு கூடுதலாக வாங்கி இருக்கிறோம். அதிமுகவில் ஒரு போதும் வீழ்ச்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணியாற்றும் கட்சி அதிமுக. நாடாளுமன்றத் தேர்தல் வேறு. சட்டமன்றத் தேர்தல் வேறு. வரும் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் வகையில் அதிமுக கூட்டணி அமைக்கும். தேர்தல் நேரத்தில் எறும்புகளை போல, தேனீக்களை போல சுறுசுறுப்பாக தொண்டர்கள் செயல்பட்டு அதிமுக ஆட்சி அமைக்க பணியாற்ற வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அதிமுக குறித்து தவெக தலைவர் விஜய் பேசவில்லை என்று மற்றவர்கள் துடிக்கிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை. 30 ஆண்டு காலம் தமிழகத்தை ஆட்சி செய்த அதிமுக, மக்களுக்காக நிறைய திட்டங்களை செய்துள்ளது. அப்படி இருக்கும் போது, விஜய் எப்படி விமர்சிப்பார்? ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு குறிக்கோள் உள்ளது. அந்த குறிக்கோளை முன்னிறுத்தியே, அதன் தலைவர்கள் பேசுவார்கள்.
இதற்காக மற்றவர்கள் ஆதங்கப்படக் கூடாது. அதிமுகவை பொறுத்த வரை, எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது அதிமுகவில் எந்த ஒரு பிளவும் இல்லை. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது, பொதுக்குழு உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றி நீக்கப்பட்டுள்ளனர். எனவே, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு இனி மேல் இடம் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *