இராகவன் கருப்பையா – இவ்வாண்டின்
நோன்பு மாதம் முடியும் தருவாயில் இருக்கும் இவ்வேளையில் தேசிய பள்ளிகளில் பயிலும்
இந்திய மாணவர்கள் இடைவேளையின் போது இம்முறை நிம்மதியாக உணவு உட்கொண்டது நமக்கு
மகிழ்ச்சியளிக்கிறது.
பல்லாண்டுகளாக நோன்பு மாதத்தின்
போது சிற்றுண்டிகள் மூடப்பட்டுள்ள நிலையில் நம் பிள்ளைகள் பள்ளிக்கூடங்களின் உடை
மாற்றும் இடங்களிலும் கழிப்பரைகளிலும், அசுத்தமான,
பொருத்தமில்லாத இதர இடங்களிலும் உணவு உட்கொள்ள வேண்டிய
கொடுமைகளுக்கு ஆளாகியிருந்த கதைகள் ஏராளம்.
எனினும் அத்தகைய அவலங்களுக்கு
கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் இவ்வாண்டு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். நோன்பு
மாதத்தின் போது சிற்றுண்டிகள் மூடப்படக் கூடாது என்றும் முஸ்லிம் அல்லாத மாணவர்கள்
மரியாதையாக நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கட்டளையிட்டது நமக்கு ஆறுதலளித்துள்ளது.
இருப்பினும் எதிர்காலத்திலும் நம்
பிள்ளைகளுக்கு இத்தகைய சாதகமான சூழல் தொடர்ந்து நிலவும் என்பதற்கு உத்தரவாதம்
இல்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஏனெனில் ஃபட்லினா பள்ளிக்கூடங்களுக்கு
உத்தரவுதான் பிறப்பித்தாரே தவிர அது சட்ட ரீதியான ஒரு அமுலாக்கம் இல்லை.
கல்வியமைச்சர் மாறினாலோ அரசாங்கம்
மாறினாலோ இந்நிலையில் மாற்றங்கள் ஏற்படக் கூடும் என்பதுதான் நிதர்சனம். நம்
பிள்ளைகளின் நிலை ‘பழைய குருடி கதவைத் திறடி’யாகக் கூட மாற வாய்ப்பிருக்கிறது.
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால்
பெற்றோர்கள் பழையபடி பள்ளிக்கூட வாசலில் கொடிபிடித்து நிற்க வேண்டிய அவலம்
ஏற்படக்கூடும். அதே சமயம் நோன்பு மாதத்தின் போது சிற்றுண்டிகள் கட்டாயமாக மூடப்பட
வேண்டும் என சட்டம் வகுக்கப்பட்டாலும் வியப்பில்லை.
பாஸ் கட்சி ஆட்சியமைத்தால் அதற்கான
சாத்தியம் உண்டு என்பதை நாம் நிராகரிக்க மூடியாது. இம்முறைக் கூட அக்கட்சியைச்
சேர்ந்த சிலர் அவ்வாறான போக்கைதான் வலியுறுத்தினார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள
வேண்டும்.
இவற்றுக்கெல்லாம் நிரந்தரத் தீர்வு
வழங்கும் வல்லமை தமிழ் பள்ளிக்கு மட்டும்தான் உள்ளது எனும் உண்மை நம் சமூகத்தைச்
சார்ந்த எல்லா பெற்றோருக்கும் தெரிய வேண்டியது அவசியமாகும்.
நாட்டில் தற்போது இருக்கும் 530 தமிழ் பள்ளிகளில் எந்த ஒரு பள்ளியிலும் நோன்பு மாதத்தின் போது அதன்
சிற்றுண்டி மூடப்படுவதில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் நம்
பிள்ளைகளின் இயல்புநிலை பாதிக்கப்படுவதில்லை.
அதே சமயம் ‘கிள்ளிங்’ என்ற
இழிச்சொல்லுக்கும் தமிழ் பள்ளிகளில் இடமில்லை. தேசிய பள்ளிகளில் ஒரு சில மாணவர்கள்
அவ்வப்போது விளையாட்டுத்தனமாக பயன்படுத்தும் அந்த இழிச்சொல்லினால் நம் மாணவர்களின்
மனநிலை வெகுவாக பாதிக்கப்படுகிறது என்பதையும் நாம் உணர வேண்டும்.
இவற்றுக்கு அப்பாற்பட்டு, இன ரீதியிலான பகடி வதையும் தமிழ் பள்ளிகளில் இல்லை. தேசிய பள்ளிகளில்
சில வேளைகளில் பகடி வதைக்கு உள்படும் நம் பிள்ளைகள் எதிர்விளைவுகளுக்கு பயந்து அது பற்றி வெளியே சொல்வதில்லை. இதுவும் கூட
அவர்களுடைய மனநிலையை பெருமளவில் பாதிக்க வாய்ப்பிருக்கிறது.
“தேசிய பள்ளிகள் சமய
பள்ளிகளைப் போல மாறிக் கொண்டிருக்கின்றன. அதனால்தான் அண்மைய ஆண்டுகளாக தேசிய
பள்ளிகளுக்கு மலாய்க்காரர் அல்லாதாரின் ஆதரவு குறைந்து வருகிறது,” என முன்னாள் பிரதமர் மகாதீர் சில ஆண்டுகளுக்கு முன்
கருத்துரைத்திருந்ததையும் இவ்வேளையில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
அதிகமான நேரம் சமய பாடங்களுக்கும்
சமய போதனைகளுக்கும் பயன்படுத்தப்படுவதால்தான் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.