இளம் விளையாட்டாளர்கள் 20 சதவீதம் வரை மாஸ் விமான டிக்கெட் கழிவைப் பெறலாம்
- Hisha Thamil
- 08 May, 2024
சிப்பாங், மே 8-
மலேசியன் ஏர்லைன்ஸ் விமான டிக்கெட்டுகளில் 20 சதவீதம் வரை இளைய விளையாட்டாளர்களுக்கு கழிவு உள்ளதாக இளைஞர், விளையாட்டு அமைச்சும் மலேசியா ஏவியேஷன் குழுமமும் அறிவித்துள்ளது.
இந்த ஓராண்டு கால ஒத்துழைப்பின் மூலம் 1,000 விளையாட்டு வீரர்கள், 150 பயிற்சியாளர்கள், 221 சங்கங்கள், விளையாட்டு அமைச்சால் அங்கீகரிக்கப்பட்ட 103 உள்நாட்டு, வெளிநாட்டு விளையாட்டு பயிற்சிகள் அனைத்தும் பயனடையும் என்று தாம் எதிர்பார்ப்பதாக இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ கூறினார்.
இந்த முயற்சியானது இளைய விளையாட்டாளர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். 12 முதல் 18 வயதிற்குட்பட்ட இளைய விளையாட்டாளர்கள் போதிய பண வசதியைக் கொண்டிருக்காததால் வெளி வாய்ப்புகளைத் தேடி போவதில்லை. இந்த கழிவின் மூலம், இளைய விளையாட்டு வீரர்கள் அதிக ஆர்வத்தை விளையாட்டுத்துறையில் காட்டுவதோடு வெளிநாட்டு விளையாட்டு போட்டிகளில் தயக்கமில்லாமல் கலந்து கொள்வர் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இளைஞர், இளையாட்டு அமைச்சுக்கும் மலேசிய ஏர்லைன்ஸ் குழுமத்திற்கும் இடையே நடந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நிகழ்ச்சிக்குப் பிறகு ஹன்னா இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
தள்ளுபடியைப் பெற ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்கள் அந்தந்த சங்கங்கள் அல்லது தேசிய விளையாட்டு கவுன்சில், மாநில இளைஞர், விளையாட்டுத் துறை மூலம் விண்ணப்பம் செய்யலாம் என்று ஹன்னா கூறினார்.
மலேசியன் ஏர்லைன்ஸால் இயக்கப்படும் விமானங்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என்றும் மலேசிய ஏர்லைன்ஸின் தலைவர் டத்தோ இஷாம் இஸ்மயில் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *