மலேசியா மீது அமெரிக்கா 24% வரி விதிப்பு- அதிபர் டிரம்ப் அதிரடி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப். 4-

மலேசியா மீது அமெரிக்கா இருபத்து நான்கு விழுக்காட்டு வரியை விதித்துள்ளது. பல்வேறு நாடுகள் மீது அதிபர் டொனால்டு டிரம்ப் அமல்படுத்தியுள்ள அதிரடியான வர்த்தக நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மலேசியா மீதும் அத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு அட்டவணையில் மலேசியா பதினோராவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா மீதான பொருட்களுக்கு மலேசியா 47 விழுக்காடு வரி விதித்துள்ள வேளையில், மலேசியப் பொருட்களுக்கு அதில் பாதி அளவாக பரஸ்பரம் 24 விழுக்காடு வரியை அந்நாடு அறிவித்துள்ளது.

மிக அதிகமான வரி விதிப்புக்கு இலக்காகியுள்ள நாடுகளில் சீனாவும் ஒன்றாகும். உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார வல்லரசான சீனா மீது 34 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மீது 20 விழுக்காடு வரியும் வியட்நாம் மீது 46 விழுக்காடு வரியும் இலங்கை மீது 44 விழுக்காடு வரியும் கம்போடியா மீது 49 விழுக்காடு வரியும் லாவோஸ் மீது 48 விழுக்காடு வரியும் மியன்மார் மீது 44 விழுக்காடு வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கப் பொருட்கள் மீது மற்ற நாடுகள் விதித்துவரும் வரிகளுக்கு எதிர்வினையாக இப்புதிய வரிகள் விதிக்கப்படுகின்றன என்று டிரம்ப் வலியுறுத்தினார். அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் குறைந்தபட்ச வரம்பாக 10 விழுக்காடு வரி விதிக்கப்படும். இது சனிக்கிழமை நடப்புக்கு வருகிறது. அதே வேளையில், கூடுதல் வரிவிதிப்புகள் இம்மாதம் 9ஆம் தேதியன்று நடப்புக்கு வரும்.

இதனிடையே, அதிபர் டிரம்பின் வரி விதிப்புக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அந்நாட்டின் மீது மலேசியா கூடுதல் வரி எதனையும் விதிக்காது என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் அமைச்சு அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் வரிவிதிப்பை மலேசியா கடுமையாகக் கருதுகிறது. தடைகளற்ற, சமத்துவமான வர்த்தக உணர்வை தொடர்ந்து நிலைநிறுத்தி வருவதை உறுதி செய்ய அமெரிக்காவுடன் அது தொடர்ந்து தீவிரமாகப் பேச்சு நடத்திவரும். இருந்த போதிலும், பதிலுக்கு வரிகளை விதிக்க இது முனையாது. உலகளாவிய வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கு கணிசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பல நாடுகள் புதிய வரி விதிப்புகளினால் பாதிக்கப்பட்டுள்ளன என்று நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அந்த அமைச்சு குறிப்பிட்டது.

 Amerika mengenakan cukai 24% terhadap barangan Malaysia sebagai sebahagian tindakan perdagangan oleh Presiden Donald Trump. Malaysia berada di tangga ke-11 dalam senarai negara terjejas. Walaupun cukai ini dianggap serius, Malaysia tidak akan membalas dengan cukai tambahan, sebaliknya terus berunding untuk mengekalkan perdagangan adil dan terbuka.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *