கோபா அமெரிக்கா' கால்பந்து லீக் போட்டியில் வெனிசுலா, மெக்சிகோ அணிகள் வெற்றி ..
- Muthu Kumar
- 24 Jun, 2024
கோபா அமெரிக்கா' கால்பந்து லீக் போட்டியில் வெனிசுலா, மெக்சிகோ அணிகள் வெற்றி பெற்றன.
அமெரிக்காவில், 'கோபா அமெரிக்கா' கால்பந்து 48வது சீசன் நடக்கிறது. மொத்தம் 16 அணிகள், 4 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. கலிபோர்னியாவில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் உலகின் 'நம்பர்-30' ஈகுவடார் அணி, 54வது இடத்தில் உள்ள வெனிசுலா அணியை சந்தித்தது. ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் ஈகுவடாரின் என்னர் வாலன்சியா 'ரெட் கார்டு' பெற்று வெளியேறினார். பத்து பேருடன் விளையாடிய ஈகுவடார் அணிக்கு 40வது நிமிடத்தில் ஜெர்மி சர்மியன்டோ ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். முதல் பாதி முடிவில் ஈகுவடார் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட வெனிசுலா அணிக்கு ஜோன்டர் காடிஸ் , எட்வர்ட் பெல்லோ தலா ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தனர். கடைசி நிமிடம் வரை போராடிய ஈகுவடார் அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் வெனிசுலா அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
டெக்சாசில் நடந்த மற்றொரு 'பி' பிரிவு லீக் போட்டியில் மெக்சிகோ, ஜமைக்கா அணிகள் மோதின. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியின் 69வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் ஜெரார்டோ ஆர்டீகா ஒரு கோல் அடித்தார். இதற்கு ஜமைக்கா அணியினரால் பதிலடி தர முடியவில்லை. முடிவில் மெக்சிகோ அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
'பி' பிரிவில் வெனிசுலா, மெக்சிகோ அணிகள் தலா 3 புள்ளிகளுடன் முதலிரண்டு இடங்களில் உள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *