யூரோ கோப்பை தொடரில் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறிய துருக்கி அணி!

top-news
FREE WEBSITE AD

ஜெர்மனியின் லைப்சிக் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நாக்-அவுட் சுற்றின் கடைசி ஆட்டத்தில் துருக்கி - ஆஸ்திரியா அணிகள் மோதின. முதல் நிமிடத்திலேயே துருக்கி கோல் அடித்து அசத்தியது. கார்னரில் இருந்து அர்டா குலர் அடித்த பந்தை அப்துல்கரிம் பர்தாக்கி தனது தலையால் முட்டி கோல் அடிக்க முயன்றார். ஆனால் பந்து அவரை கடந்து கோல் கம்பத்துக்கு நெருக்கமாக நின்ற ஆஸ்திரியாவின் கிறிஸ்டோப் பாம்கார்ட்னரிடம் சென்றது. அவர், அதை விலக்கிவிட முயன்ற போது அருகில் நின்ற மற்றொரு டிபன்டரான ஸ்டீபன் போஷின் காலில் பட்டு கோல்கீப்பரான பேட்ரிக் பென்ட்ஸ் வசம் சென்றது.

பேட்ரிக் பென்ட்ஸ் பந்தை வலுவாக விலக்கிவிடாமல் எளிதாக தட்டிவிட்டார். அப்போது அருகில் நின்ற துருக்கி வீரர் மெரிஹ் டெமிரல், நொடிப்பொழுதில் பந்தை கோல் வலைக்குள் திணித்தார். இதனால் துருக்கி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இந்த கோல் 57-வது வினாடியில் அடிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம்யூரோ கால்பந்து வரலாற்றில் மிக விரைவாக அடிக்கப்பட்ட 2-வது கோலாக இது அமைந்தது. இதற்குமுன்னர் லீக் சுற்றில் இத்தாலிக்கு எதிராக அல்பேனியா 23 வினாடிகளில் கோல் அடித்திருந்தது.

இதன் பின்னர் ஆஸ்திரியா அணி பலமுறை கோல்கம்பத்தை நோக்கி பந்தை கொண்டு சென்றது. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. முதல் பாதியில் துருக்கி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 59-வது நிமிடத்தில் துருக்கி 2-வது கோலை அடித்தது. கார்னரில் இருந்து அர்டா குலர் உதைத்த பந்தை தலையால் முட்டி கோல் அடித்து அசத்தினார் மெரிஹ் டெமிரல். இதனால் துருக்கி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

66-வது நிமிடத்தில் ஆஸ்திரியா வீரர் மார்செல் சபிட்சர் கார்னரில் இருந்து அடித்த பந்தை ஸ்டீபன் போஷ் தலையால் முட்டி கோல் அடிக்க முயன்றார். ஆனால் பந்து இடது புறம் விலகிச் சென்றது. அங்கு கோல்கம்பத்துக்கு நெருக்கமாக மார்க் செய்யப்படாமல் நின்ற மைக்கல் கிரிகோரிட்ச் அதை கோலாக மாற்றினார். இதனால் 1-2 என்ற கணக்கில் ஆஸ்திரியா அணி நெருங்கி வந்தது. ஆனால் மேற்கொண்டு அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களின் முடிவில் துருக்கி 2-1என்றகோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதையடுத்து காயங்களுக்கு இழப்பீடாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. இதன் கடைசி நிமிடத்தில் துருக்கி வீரர் பாரிஸ் ஆல்பர் யில்மாஸ் பந்தை விரைவாக கடத்திச் செல்ல ஆஸ்திரியா கோல் கீப்பர் பேட்ரிக் பென்ட்ஸ் முன்னேறி வந்தார். அப்போது பாரிஸ் ஆல்பர் யில்மாஸ் அடித்த ஷாட்டை பாய்ந்து தடுத்தார் பேட்ரிக் பென்ட்ஸ்.

அடுத்த சில நொடிகளில் ஆஸ்திரியாவின் கிறிஸ்டோப் பாம்கார்ட்னர் கோல்கம்பத்துக்கு நெருக்கமாக பந்தை தலையால் முட்டி கோல்அடிக்க முயன்றார். ஆனால் கோல்கீப்பர் மெர்ட் குனோக் பாய்ந்து அற்புதமாக தட்டிவிட்டார். இதனால் துருக்கி அணி கோல் வாங்குவதில் இருந்து தப்பித்தது. முடிவில்அந்த அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. கால் இறுதி சுற்றில் துருக்கி வரும் 7-ம் தேதி நெதர்லாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *