கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் பிரேசில் அணியை வீழ்த்தி உருகுவே அரையிறுதிக்கு தகுதி!
- Muthu Kumar
- 08 Jul, 2024
பிபா உலகக்கோப்பை, யூரோ கோப்பை தொடருக்கு பின்னர் அதிகமாக பார்க்கப்படும் கால்பந்து தொடராக கோபா அமெரிக்கா தொடர் திகழ்ந்து வருகிறது.பொதுவாக தென் அமெரிக்க நாடுகளுக்கான தொடராக இருந்தாலும் இதில் வேறு கண்டத்தை சேர்ந்த நாடுகளும் அழைப்பு ரீதியாக பங்கேற்று வருகின்றன.
இம் முறை கோபா கால்பந்து தொடரை மேலும் பிரபலப்படுத்தும் வகையில் வட அமெரிக்காவில் உள்ள அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கோபா அமெரிக்கா தொடர் நடைபெற்று வருகிறது. இந்த முறை இந்த தொடரில் வட அமெரிக்காவை சேர்ந்த அணிகளும் பங்கேற்கவுள்ளது.
அந்த வகையில் தென் அமெரிக்காவை சேர்ந்த 10 நாடுகளும் வட அமெரிக்காவை சேர்ந்த 6 அணிகளும் பங்கேற்கிறது. உலககோப்பைகளை அதிக முறை வென்ற அணிகளான பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே உள்ளிட்ட அணிகள் இந்த தொடரில் பங்கேற்பதால் இந்த தொடர் அதிகம் கவனம் ஈர்த்துள்ளது.
இந்த தொடரில் நடைபெற்ற முக்கியமான காலிறுதி ஆட்டத்தில் பலம்வாய்ந்த பிரேசில் மற்றும் உருகுவே ஆகிய அணிகள் மோதின. இதில் இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரமாக முயற்சி செய்தாலும் ஆட்ட நேர முடிவு வரை இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.
இதனால் 90 நிமிடங்கள் முடிந்த பின்னர் ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்க்கு சென்றது. இதில் பிரேசில் வீரர்கள் டக்ளஸ் லூயிஸ் மற்றும் மிலிட்டோ ஆகியோர் தங்கள் வாய்ப்பை கோலாடிக்காமல் வீணடித்தனர். அதே நேரம் உருகுவே தரப்பில் ஜிமெனஸ் தவிர அனைவரும் கோல் அடித்தனர். இதனால் உருகுவே அணி 9 முறை கோபா அமெரிக்கா சாம்பியனான பிரேசில் அணியை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *