எனக்கு ஏற்பட்ட நிலை யாருக்கும் வேண்டாம்! கண்ணீர் மல்க நம் தேசிய வீரர் Faisal Halim
- Thina S
- 13 Jun, 2024
கோலாலம்பூர், ஜூன் 13:
ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு உள்ளான முன்னாள் தேசியக் கால்பந்து வீரரும், சிலாங்கூர் கால்பந்து நட்சத்திர ஆட்டக்காரருமான Faisal Halim சிகிச்சைக்குப் பின்னர் இன்று பொதுவெளியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தார்.
ஆசிட் வீச்சால் உடலில் பல உறுப்புகள் பாதிக்கப்பட்ட நிலையில், தான் யாரையும் சந்திக்க வேண்டாம் என எண்ணியிருந்ததாக மிகவும் உருக்கத்துடன் அவர் தெரிவித்தார்.
இருப்பினும் சமூக ஊடகங்களில் தனக்கு ஆதரவாகப் பலரும் கருத்து தெரிவித்ததைக் கண்டு தாம் எண்ணத்தை மாற்றிக் கொண்டதாக கண்ணீர் மல்கப் பேசினார்.
ஆசிட் தாக்குதலால் இனி தம்மால் கால்பந்தாட்டத்தில் பங்கேற்க முடியாத என்கிற நிலையை நினைத்து வேதனையாக இருக்கிறது. இப்போதைக்குத் தற்காலிகமாகக் கால்பந்து துறையிலிருந்து விலகியிருக்க எண்ணியிருப்பதாகவும், உடலில் ஏற்பட்டுள்ள காயங்களிலிருந்து மீண்டெழுவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைத்திருப்பதால், ஓய்வே இப்போதைக்கு ஆறுதல் என்று உருக்கமாகப் பேசினார்.
ஆசிட் தாக்குதலைத் தாம் ஒரு விபத்தாக நினைத்தாலும், அதனை தம்மால் மறக்க முடியாமல், மனதளவில் அதிகமாகப் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அவர் கூறினார்.
இயன்ற வரையில் கால்பந்தாட்டத்தில் எனது பங்களிப்பைச் சிறப்பாகவே செய்துள்ளேன். ஆசிட் தாக்குதல் குறித்து போலிசார் விசாரணையை மேற்கொண்டுள்ள நிலையில், விசாரணைக்குத் தாம் முழுமையாக ஒத்துழைப்பதாகத் தெரிவித்தார்.
நான் கோடீஸ்வர விளையாட்டாளர் எல்லாம் இல்லை, இந்த மருத்துவச் சிகிச்சைக்குக் கூட என்னால் பணம் செலுத்த முடியாத நிலையில் தான் என் பொருளாதார நிலை உள்ளது, இந்த நிலையில் என் சிகிச்சைக்கு ஆதரவளித்த சிலாங்கூர் கால்பந்து ஆணையத்திற்கும் அரசாங்கத்திற்கும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளதாக Faisal Halim தெரிவித்தார்.
என் மீது யாருக்கேனும் தனிப்பட்ட முறையில் கோபம் இருந்தால், அதற்குத் தெரிந்தும் தெரியாமலும் நான் காரணம் என்றால், நான் மன்னிப்புக் கேட்க தயங்கமாட்டேன்.
எனக்காகத் துணை நின்று ஆதரவளித்த கால்பந்து ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளையும் முன் வைக்கிறேன். நாங்கள் விளையாட்டாளர்கள் மட்டும் தான், எங்களின் வெற்றி உங்களுக்கானது, தோல்வியிலிருந்து மீண்டு, வெற்றி பெறலாம். ஆனால் இப்போது என்னால் மீள முடியாது, மீண்டும் களத்தில் உங்களை உற்சாகப்படுத்த முடியாது,
இப்போதும் கூட காகிதத்தில் எழுதிய வார்த்தைகளை நான் வாசிக்கும் போது நடுக்கமும் பதட்டமுமாக இருக்கிறது. உச்சரிக்கும் போது வார்த்தைகள் தடுமாறுகிறது. எனக்கு ஏற்பட்ட நில.... யாருக்கும் ஏற்படக் கூடாது. நீங்களும் இது போல யாருடைய வாழ்க்கையையும் சீரழிக்காதீர்கள் என்று நெஞ்சடைக்க அவர் பேசியது பலரையும் உருக வைத்தது.
நான் வேண்டுகோளாகக் கேட்கிறேன், என் பழைய வாழ்க்கை எனக்கு கிடைக்காது.
தயவு செய்து குறிக்கோளோடும் லட்சியத்தோடும் இருக்கும் யாருடைய வாழ்க்கையயையும் சிதைத்துவிடாதீர்கள். அந்த வலி கொடுமையானது. என் வாழ்க்கையைப் போல் இனி எவரையும் முடமாக்கிவிடாதீர்கள் என்று தடுமாறிய நிலையில் செய்தியாளர்களுக்கு பதில் தந்தார் நம் தேசிய வீரர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *